ஹோம் /நியூஸ் /மதுரை /

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் விவகாரம்- தூய்மை பணியாளர்களுக்கு விடிவு காலம் எப்போது? நீதிமன்றம் கேள்வி

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் விவகாரம்- தூய்மை பணியாளர்களுக்கு விடிவு காலம் எப்போது? நீதிமன்றம் கேள்வி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்த நவீன காலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு விடிவு காலம் பிறப்பது எப்போது என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai | Tamil Nadu

மனித கழிவுகளை மனிதனே அகற்ற கூடாது என்ற சட்டத்தை முறையாக அமல்படுத்த கோரிய பொது நல வழக்கில் மாவட்ட ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் மனித கழிவுகளை மனிதனே அகற்ற கூடாது என்ற சட்டத்தை முறையாக அமல்படுத்த கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், ' 1993 ஆண்டில் இருந்தே மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை முதன்முதலில் தடைசெய்யப்பட்ட போதிலும் தொடர்ந்து வந்தது. இதன் பிறகு 2013ஆம் ஆண்டு மீண்டும் சட்டம் இயற்றப்பட்டு இவர்களுக்கான மறுவாழ்வு சட்டமும் கொண்டுவரப்பட்டது.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுதல்,  செப்டிக்டேங்க் கிளினிங் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் போது விஷ வாயு தாக்கி உயிரிழப்பவர்களின் புள்ளி விவரங்களை அரசு மறைக்கிறது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டிக் டேங்கில் இறங்கி கழிவுகளை அகற்றும் போது, நூற்றுக்கணக்கான இறப்புகள் பதிவாகின்றன. இதனால், மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு பதிலாக இயந்திரம், ரோபோ மூலம் அகற்றலாம்' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் R.மகாதேவன்,  J.சத்தய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முன்பு, மனுதாரர் தரப்பில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் புகைபடங்கள் சமர்பிக்கப்பட்டது.

இதனை கண்டு ஆத்திரமடைந்த நீதிபதிகள், மனித கழிவுகளை மனிதனே அகற்ற கூடாது, என்ற சட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள்  தீவிரமாக அமல்படுத்தாமல், கண்டுகொள்ளாமல் இருந்தால் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என எச்சரித்தனர்.

மேலும், இதேநிலை தொடர்ந்தால், மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு தொடரப்படும் என தெரிவித்த நீதிபதிகள், இந்த நவீன காலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு விடிவு காலம் பிறப்பது எப்போது என சரமாரியாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Judge, Judgement, Madurai High Court