மதுரை ராஜாமுத்தையா மன்றம் அருகிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கப்பல் பொறியாளர் நீலவண்ணன். இவரது மனைவி பொன்மணி (47). எம்.பி.ஏ படித்துள்ள இவர், குளிர் பானங்களின் விநியோகஸ்தராக இருந்தார். நம்மாழ்வார் மூலம் இயற்கை விவசாயத்தில் ஏற்பட்ட நாட்டத்தால், இயற்கை விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். இதற்காக சிக்கந்தர் சாவடியிலிருந்து குமாரம் செல்லும் சாலையில் வைரவ நத்தத்தில் 7 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
பாரம்பரிய நெல் ரகங்கள், கத்தரி, வெண்டை, கொத்தவரை, கீரைகள், மா, தர்பூசணி பழங்கள் பயிரிட்டு வருகிறார். இங்கு விளை விக்கப்படும் காய்கறிகளை உழவன் அங்காடி மூலம் விற்பனையும் செய்து வருகிறார்.
இதுகுறித்து பொன்மணி கூறிய தாவது: இயற்கை விவசாயத்தில் எனக்கு நாட்டம் ஏற்பட்டது எனது கணவர் அளித்த ஊக்கத்தால்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வைரவநத்தத்தில் 7 ஏக்கர் நிலம் வாங்கினோம். அங்கு இயற்கை விவசாயம் செய்வதற்காக நாட்டு மாடுகள் வளர்த்து வருகிறோம். பஞ்ச காவ்யா, ஜீவாமிர்தம் ஆகிய இயற்கை இடுபொருட்களை இடுகிறோம். இயற்கை விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் ஆடு, மாடுகள், கோழிகள், மீன்களை வளர்த்து வருகிறேன். இதன் மூலம் கிடைக்கும் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகிறேன்.
பாரம்பரிய நெல் ரகங்களான தேங்காய்ப்பூ சம்பா, சொர்ண மயூரி, சீரகச் சம்பா, கருப்பு கவுனி, தூயமல்லி, கிச்சடி சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டு அரிசியாக விற்பனை செய்து வருகிறேன். சிவகங்கையில் பல ஏக்கரில் மா, கொய்யா, தர்பூசணி பழங்கள், காய்கறிகள் பயிரிட்டுள்ளோம்.
இயற்கை விவசாயம் என்பதால் கூடுதல் செலவாகிறது. ஆனால், அதற்குத் தகுந்த விலை கிடைப்பதில்லை. இருந்தாலும் லாப நோக்கின்றி ரசாயனம் கலக்காத காய்கறிகள், பழங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உழவன் அங்காடி மூலம் விற்பனை செய்து வருகிறோம் என்றார்.
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.