ஹோம் /நியூஸ் /மதுரை /

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல்.. கப்பலூர் சுங்கசாவடியை கண்டித்து திருமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம்!

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல்.. கப்பலூர் சுங்கசாவடியை கண்டித்து திருமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம்!

சுங்கசாவடியை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

சுங்கசாவடியை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

திருமங்கலம் வாகன உரிமையாளர்களுக்கும் கப்பலூர் சுங்கச்சாவடிக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்ச்சை நிலவி வருவதோடு மட்டுமல்லாமல் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Madurai | Madurai | Thirumangalam (Tirumangalam)

  உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருமங்கலம் நகர் பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி தொடர்ந்து சர்ச்சைக்கு பெயர் போன சுங்கச்சாவடியாக மாறி வருகிறது. காரணம் கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளது தான்.

  பொதுவாக சுங்கச்சாவடி என்பது நகராட்சி எல்லைக்கு 4 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைய வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதிமுறைகளை மீறி கப்பலூர் சுங்கச்சாவடி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி எல்லைப்பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்ததால் திருமங்கலம் வாகன உரிமையாளர்களுக்கும் கப்பலூர் சுங்கச்சாவடிக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்ச்சை நிலவி வருவதோடு மட்டுமல்லாமல் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

  இதேபோல் நான்கு வழிச் சாலையை பயன்படுத்தாத கல்லுப்பட்டி பேரையூர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

  இந்நிலையில் விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்தும் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும் 22ஆம் தேதி கடையடைப்பு போராட்டமும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

  இதையும் படிங்க | மதுரையில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்கள் ஏரியா இருக்கா?

  அந்த வகையில், இன்று நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் அனைத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளது. திருமங்கலத்தில் 5000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

  ஆட்டோக்கள், கார்கள், வேன்கள் மற்றும் எந்த வாகனங்களும் இயக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு மேலாக வாகன ஓட்டிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் என பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வு காணப்படாத கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் இந்த ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தால் வாகன உரிமையாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் விடை கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

  செய்தியாளர்: சிவக்குமார், திருமங்கலம்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Bandh, Madurai, Protest, Toll gate