Home /News /madurai /

Madurai | கம்பீரமாக காட்சியளிக்கும் திருமலை நாயக்கர் மகால்- சிறப்புகள் என்ன?

Madurai | கம்பீரமாக காட்சியளிக்கும் திருமலை நாயக்கர் மகால்- சிறப்புகள் என்ன?

மதுரை திருமலை நாயக்கர் மகால்

மதுரை திருமலை நாயக்கர் மகால்

Madurai News | மதுரையின் முக்கிய சுற்றுலாத் தலமாக திருமலை நாயக்கர் மகால் திகழ்ந்துவருகிறது.

திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் இந்த அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி 1636 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இன்றுவரை அதன் பொலிவு இழக்காமல் மதுரை மக்களுக்கும், வெளியூர் மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கும் காட்சியளித்து வருகிறது.

மதுரையில் அமைந்துள்ள இக்கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் இந்தோ சார்செனிக்பாணி கட்டிட கலைநயத்தில் இந்த கட்டிடமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே, தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது.

தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் வரலாற்று சின்னம் என்ற பெருமையை பெற்ற இந்த திருமலை நாயக்கர் மகாலை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

மதுரை திருமலை நாயக்கர் மகால்


திருமலை நாயக்கர் வரலாற்றை விளக்கும் வகையில் தினமும் மாலை ஒளியும் ஒலியும் காட்சியானது நடத்தப்படும். அதன் மூலம் திருமலை நாயக்கர் வரலாற்றை லேசர் கருவிகள் கொண்டு மக்களுக்கு தெரியப்படுத்துவர்.

இந்த அரண்மனை 58 அடி உயரம் கொண்டது. 248 பிரம்மாண்டமான பெரிய தூண்கள் இன்றளவும் இந்த அரண்மனையை தாங்கி நிற்கின்றன. கோட்டையின் மேற்கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணகாட்சிகள் ஓவியமாய் இடம்பெற்றுள்ளன. அரண்மனையின் பின்புறம் நாட்டிய மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையை சார்ந்த தொன்மையான சிலைகள், நாயக்கர் காலத்தில் உபயோகிக்கபட்ட பொருட்கள், தமிழ் ஏட்டுச்சுவடிகள் ஆகியவை அந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. தொல்லியல் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த அரண்மனை அதன் பொலிவிழக்காமல் காக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி