முகப்பு /செய்தி /மதுரை / வாசலில் நோயாளி, சாலையில் ஆம்புலன்ஸ்! - என்ன நடக்கிறது மதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில்?

வாசலில் நோயாளி, சாலையில் ஆம்புலன்ஸ்! - என்ன நடக்கிறது மதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில்?

மதுரை ஆரம்ப சுகாதார நிலையம்

மதுரை ஆரம்ப சுகாதார நிலையம்

“நகர்ப்புற சுகாதார நிலையத்தில் இருக்கும் அடிப்படையான இட நெருக்கடி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை"

  • 2-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் வைத்து வயதான நோயாளிக்கு சிகிச்சை அளித்து, ஸ்ட்ரெச்சரில் வைத்து சாலைக்கு கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புதூர் ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் வைத்து வயதான பெண் நோயாளி ஒருவரை மருத்துவமனை ஊழியர்கள் ஸ்டரெச்சரில் தூக்கி வைத்து, அதனை தொடர்ந்து அவரை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லும் அதிர்ச்சி மிகுந்த காட்சி வெளியாகின.

இந்த சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரித்ததில், அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

2009-ம் ஆண்டு முதல் புதூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தின் உள்ளேயே நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எனவும் அது மதுரை வடக்கு பகுதி முழுவதும் உள்ள அவசர தேவைகளுக்கும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு ராஜாஜி மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து செல்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவும் கூறினர்.

அந்த சூழலில், சில மாதங்களுக்கு முன் இந்த நிலையத்திற்கு பொறுப்பு மருத்துவ அதிகாரியாக தாஜ் நிஷா என்பவர் நியமிக்கப்பட்ட பின்னர், ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் நோயாளிகள் அமர்வதற்கான இருக்கைகளை அமைத்து, ஆம்புலன்சை அருகேயுள்ள புதூர் பேருந்து நிலையத்தில் நிறுத்துமாறு நடைமுறைகளில் மாற்றம் செய்துள்ளார். இதனால் தான் ஆம்புலன்சை சாலையில் நிறுத்தி வைத்து நோயாளிகளை ஏற்றும் நிலை ஏற்பட்டது என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

"ஆம்புலன்ஸ் இட மாற்றத்திற்கு உண்மையான காரணம் மருத்துவர் நிஷாவின் சொந்த கார் தான். நெருக்கடியான மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே மருத்துவர் நிஷாவின் சொந்த காரை நிறுத்துவதற்காகவே, ஆம்புலன்ஸ் நிறுத்தியிருந்த இடத்தில் வெளி நோயாளிகள் அமர்வதற்கான இருக்கைகளை அமைத்தனர். பின், மருத்துவமனை உள் நுழைவு வாயிலில் மருத்துவரின் கார் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுரையில் பிரபல ஓட்டலில் தீ விபத்து.. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்!

இந்த காரணங்களால் தான் ஆம்புலன்சை வளாகத்திற்கு உள்ளே எடுத்து செல்ல முடியவில்லை. இதனாலேயே ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வயதான பெண் நோயாளியை வாயிலில் வைத்து பரிசோதித்து விட்டு, சாலையில் நிறுத்தியிருந்த ஆம்புலன்சில் ஏற்றி ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், பரிதாபகரமாக அவரது உயிர் வழியிலேயே பிரிந்து விட்டது.” என ஆம்புலன்ஸ் ஊழியர் இருளாண்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயிரிழந்த பெண்ணின் மகளிடம் கேட்டபோது, "என்னுடைய தாயாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே ஒரு ஆட்டோவில் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழைத்து வந்தோம். மருத்துவமனை வாயிலில் வைத்தே என் தாயாரை பரிசோதித்து பார்த்து விட்டு அனுப்பினார்கள். நான் ஏன் வெளியிலேயே வைத்து பார்க்கிறீர்கள் என அங்கிருந்த செவிலியர்கள், ஊழியர்களிடம்  கேட்டேன். ஆனால் அவர்கள் எதுவும் சொல்லாமல் அங்கு வைத்தே ஆக்சிஜன் அளித்து ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி விட்டனர். வழியிலேயே எனது தாயாரின் உயிர் பிரிந்து விட்டது. மருத்துவர்களும், செவிலியர்களும் தீவிரமாக செயல்பட்டிருந்தால் என்னுடைய தாயாரை காப்பாற்றி இருக்கலாம்" என கண்ணீருடன் பேசினார்.

இந்த விவகாரம் குறித்து புதூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவர் தாஜ் நிஷாவிடம் விளக்கம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், ஆம்புலன்சை இடம் மாற்றம் செய்யும் முடிவை தான் எடுக்கவில்லை. அந்த முடிவை எடுத்தது மாநகராட்சி நகர் சுகாதார அதிகாரி தான். அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என கூறினார். மேலும் தான் இன்று மட்டும் தன்னுடைய சொந்த வாகனத்தில் வந்ததாகவும் மற்ற நாட்களில் தன்னை இறக்கி விட்டுவிட்டு கார் சென்று விடும் என விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக 200 பக்க அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

மேலும் அந்த நோயாளியை கொண்டு வரும்போதே அவருடைய இதய துடிப்பு மிக குறைவாக இருந்ததாகவும் அதனால் தான் அவரை உடனடியாக பரிசோதித்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிட்டார். நோயாளி உயிரிழப்புக்கும் ஆம்புலன்ஸ் வெளியே நிறுத்தப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் உறுதியளித்தார்.

இது குறித்து மதுரை மாநகராட்சி நகர் சுகாதார அதிகாரி வினோத்திடம் கேட்டதற்கு, "மருத்துவமனை வளாகத்தில் வெளி நோயாளிகள் அமர்வதற்காக தான் அந்த இடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்காக புதூர் பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற சுகாதார நிலையத்தில் இருக்கும் அடிப்படையான இட நெருக்கடி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை" என தெரிவித்தார்.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும், ஆம்புலன்சும் இயங்குவதற்கான அடிப்படை நோக்கத்தையே கேள்விக்கு உள்ளாக்கும் வகையிலான சம்பவங்கள் மதுரை புதூரில் நடந்தேறி வருவது மக்கள் மத்தியில் அவசியமற்ற குழப்பத்திற்கும், சர்ச்சைக்கும் வழிவகுத்துள்ளன. எனவே, மாநகராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறை அமைச்சரும் உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

First published:

Tags: Ambulance, Madurai