ஹோம் /நியூஸ் /Madurai /

Madurai | ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாற்றியமைக்கப்படாத மின் கம்பிகள்: பொதுமக்கள் அதிருப்தி

Madurai | ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாற்றியமைக்கப்படாத மின் கம்பிகள்: பொதுமக்கள் அதிருப்தி

மதுரை

மதுரை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சாலைகளில் மாற்றியமைக்கப்படாத மின் கம்பிகள் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். புதைவட திட்டத்தின் நிலை என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மதுரை தேர்வானபோதே தரமான கட்டமைப்பு வசதிகள், கம்பியில்லாத தடையற்ற மின்சாரம், சுத்தமான குடிநீர், பளபளக்கும் சாலைகள், பார்க்கிங் வசதிகள் என பல்வேறு வசதிகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனால் இத்திட்டம் குறித்து மதுரை மாநகர மக்களிடம் பெரும் வரவேற்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

    இதற்காக மதுரை மாநகராட்சியில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை தேர்வு செய்து ரூ.995.55 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் முக்கியமானது மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மின் கம்பம், மின் வயர்கள் இல்லாத ஸ்மார்ட் சாலைகளாக அமைக்கப்படும் என்ற திட்டம் ஆகும்.

    அதனடிப்படையில் தற்போது சித்திரை வீதியில் கருங்கல் சாலையும், ஆவணி வீதிகளில் பேவர் பிளாக் சாலையும், மாசி வீதிகளில் கான்கிரீட் சாலையும் அமைக்கப்பட்டன. இந்த சாலைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திட்டமிட்டபடி தொலைத்தொடர்பு கேபிள்கள், மின்சார கேபிள்கள் ஆகியவற்றுக்காக பூமிக்கு அடியில் தனித்தனி கம்பார்ட்மெண்ட்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதுவரை மின்சார மற்றும் தொலைத்தொடர்பு கேபிள்கள் சாலைகளின் மேலே திறந்தவெளியில் குறுக்கும், நெடுக்குமாகவே தொங்கிக் கொண்டிருக்கின்றன.

    இது குறித்து தெற்கு மாசி வீதியில் கடை வைத்திருந்த சூர்யா என்ற நபரிடம் கேட்ட பொழுது, ‘இங்கு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டதாகவும் புதைவட மின்சார கேபிள்கள் போடப்பட்டும். அவை தற்பொழுது வரை செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை என்றும் நீர் பைப்புகள் அமைத்தாலும் நீர் விநியோகம் சீராக இல்லை. இங்கு அமைக்கப்பட்ட புதிய சாலை விளக்குகள் அமைக்கப்பட்ட முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே எறிந்ததாகவும் அதன் பிறகு அவை எரிவதில்லை என்றும் கூறினார்.

    திறந்தவெளியில் செல்லும் மின்சார கம்பிகளால் நகர சாலைகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

    மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது தினசரி சுவாமி ஊர்வலம் நான்கு மாசி வீதிகளில் நடைபெறும். குறிப்பாக தேரோட்டத்தின்போது கடந்த காலங்களில் இப்பகுதியில் மின் தடை செய்யப்படுவதும், குறுக்கே செல்லும் வயர்களை தற்காலிகமாக துண்டித்து, தேரோட்டம் நிறைவடைந்த பிறகு மறு இணைப்பு கொடுப்பதும் வழக்கம்.

    ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி மின்சார கேபிள்களை பூமிக்கடியில் புதைத்திருந்தால் இதுபோன்ற இடையூறுகளும், விபத்து அபாயமும் தவிர்க்கப்படும். தவிர மின் கம்பிகளுக்காக மரங்கள் வெட்டப்படும் சூழலும் ஏற்படாது. எனவே அடுத்த சித்திரைத் திருவிழாவுக்கு முன்பாவது இப்பணிகளை நிறைவேற்ற வேண்டும் என மீனாட்சி அம்மன் கோயில் சுத்துவட்டார மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, மின்சார கேபிள்களை பூமிக்கடியில் கொண்டு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விட்டோம்.

    இனி மின்வாரியம்தான் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவர்கள் பணிகளை விரைவில் தொடங்க உள்ளனர். அதனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கூறியபடி மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சாலைகள் ஸ்மார்ட் சாலைகளாக மாறும். அந்த திட்டமிடுதலுடன் தான் இந்த சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறினர்.

    Published by:Karthick S
    First published:

    Tags: Madurai