ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை மீனாட்சியின் நிஜப்பெயர் முதல் சாதி வரி நீக்கம் வரை... கல்வெட்டு ஆய்வு முடிவுகள் சொல்லும் புதிய உண்மைகள்...

மதுரை மீனாட்சியின் நிஜப்பெயர் முதல் சாதி வரி நீக்கம் வரை... கல்வெட்டு ஆய்வு முடிவுகள் சொல்லும் புதிய உண்மைகள்...

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

Madurai Meenakshi Amman | கல்வெட்டு ஆய்வில் கண்டறியப்பட்ட மிக முக்கியமான குறிப்பு, மீனாட்சி என்ற பெயர் எங்குமே இல்லை என்பது தான். 1752ம் ஆண்டு வரை மீனாட்சி என்ற பெயரே அம்மனுக்கு கிடையாது. 1710ல் தான் சொக்கநாதர் என்ற பெயரே சுவாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து விரிவாக விளக்குகிறது இந்த கட்டுரை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்படாமலேயே இருந்தது. மத்திய அரசு 60 கல்வெட்டுக்களை ஆங்கில குறிப்புகளாக மட்டும் வெளியிட்டிருந்தது.

தற்போது இந்துசமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மீனாட்சி அம்மன் கோயிலில் மொத்தமுள்ள 450 கல்வெட்டுக்களையும் ஆய்வு செய்து படியெடுத்து தொல்லியல் துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த ஆய்வு முடிவுகள் விரைவில் நூலாக வெளியாகவுள்ள நிலையில்,  ஆய்வாளர் சாந்தலிங்கம் மீனாட்சி அம்மன் கோயிலின் முழுமையான கல்வெட்டு ஆய்வின் வழியாக அறியப்பட்ட பல புதிய செய்திகளை நியூஸ் 18 தமிழ்நாட்டுக்கு பகிர்ந்துள்ளார்.

தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம்

கல்வெட்டுகளின் நிலை :

கோயிலில் கண்டறியப்பட்ட 450 கல்வெட்டுக்களில் 78 முழுமையாக இருந்தன. இதில், 77 முழு தமிழிலும், 1 முழு சமஸ்கிருதத்திலும், தேவநாகரி மொழியில் எழுதப்பட்ட 1 வரி கல்வெட்டும் உள்ளன.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டை ஆராய்ச்சி செய்கின்றனர்

இவை தவிர, 23 துண்டு கல்வெட்டுக்களும், 351 சிறிய சிறிய துண்டு கல்வெட்டுக்களும் உள்ளன. இந்த துண்டுக் கல்வெட்டுக்கள், கோயில் பெரிய அழிவுக்கு உள்ளாகியுள்ளதை குறிக்கிறது. அதனால் தான் கல்வெட்டுக்கள் சரியான அமைப்பில் இல்லாமல் சிதறி உள்ளன.

கோயில் கட்டுமான தகவல்கள் :

2000 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் ஒரு சிவன் கோயில் இருந்ததாக மதுரை காஞ்சி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர், "அங்கயற்கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல்" என பாடியுள்ளார்.

கிபி 1200-ல் கோவில் கட்டப்பட்டுள்ளதும், கிபி 1250-ல் இயற்கை பேரிடரால் கோயிலின் கருவறை, ஆடவல்லான் சந்நிதி, எழுநிலை கோபுரம் ஆகியவை அப்போது சிதைந்ததும் தெரியவருகிறது. அதன்பின் கோவில் சீரமைக்கப்பட்டு 1250-ல் கோயிலுக்கு முதன்முறையாக திருத்தேர் செய்யப்பட்டுள்ளது.

கி.பி 1190 - 1216 வரை ஆட்சி செய்த சடையவர்ம குலசேகரன் காலத்திய 'வைகைக்கரை' கல்வெட்டு தான் கோயிலில் இருப்பதில் மிக பழமையான கல்வெட்டு. அது, கிபி. 650 - 700 ஆண்டில் கூன்பாண்டியன் (எ) நின்றசீர் நெடுமாறன் வைகையில் தடுப்பணை கட்டி திருப்புவனம் மற்றும் திருச்சுழி பகுதிக்கு நீர் கொண்டு சென்றதை குறிக்கிறது.

தமிழகத்தில் அணை கட்டப்பட்டதற்கு உள்ள முதல் கல்வெட்டு சான்று இது தான். கோயிலில் இருப்பதிலேயே மிக பழைய சிற்பம், சொக்கநாதர் சன்னதிக்கு இடதுபுறம் உள்ள சூரியனார் சிற்பம் தான். அது 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.

கோயில் கோபுரங்களில் கிழக்கு கோபுரம் தான் மிக தொன்மையானது. அது 12-ம் நூற்றாண்டில் குலசேகரன் காலத்தில் துவங்கப்பட்டு, அவரது தம்பி மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் முடிவடைந்துள்ளது. எனவே, அந்த கோபுரத்திற்கு சுந்தரபாண்டியன் திருக்கோபுரம் என்ற பெயரும் உள்ளது.

கோபுரங்களும் அவை கட்டப்பட்ட காலமும் :

1. கிழக்கு கோபுரம் - 13ம் நூற்றாண்டு

2. மேற்கு - 14ம் நூற்றாண்டு

3. தெற்கு - 15ம் நூற்றாண்டு

4. வடக்கு - 16ம் நூற்றாண்டு

மண்டபங்களும் அவை கட்டப்பட்ட ஆண்டும் :

1. கம்பத்தடி மண்டபம் - கிபி 1583

2. நூற்றுக்கால் மண்டபம் - கிபி 1600

3. ஆயிரங்கால் மண்டபம் - கிபி 1600 (வீரப்ப நாயக்கரால்  கட்டப்பட்டது)

13ம் நூற்றாண்டுக்கு பிறகு மதுரையில் இஸ்லாமியர்கள் படையெடுப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது கோயில் பேரழிவுக்கு உள்ளாகியது. மீனாட்சியின் கருவறை, அர்த்த மண்டபம் கூட சேதப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

விஜயநகர பேரரசு காலத்தில் கிபி 1530 முதல் 1546 வரையிலான அச்சுதராயர் என்பவரின் காலத்திய கல்வெட்டில் தான் சித்திரை திருவிழா பற்றிய முதல் குறிப்பு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெற்றதும், அதன் செலவுகளுக்காக பல கிராமங்கள் அளிக்கப்பட்டதும் குறிக்கப்பட்டுள்ளன.

கிபி 1736ம் ஆண்டு வரை மதுரையில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றுள்ளது.  நாயக்கர்களால் பாதுகாக்கப்பட்டு நமக்கு அளிக்கப்பட்டது தான் இப்போதுள்ள கோயில்.

அம்மன் பெயர் மீனாட்சி அல்ல :

கல்வெட்டு ஆய்வில் கண்டறியப்பட்ட மிக முக்கியமான குறிப்பு, மீனாட்சி என்ற பெயர் எங்குமே இல்லை என்பது தான். 1752ம் ஆண்டு வரை மீனாட்சி என்ற பெயரே அம்மனுக்கு கிடையாது. 1710ல் தான் சொக்கநாதர் என்ற பெயரே சுவாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு வரை சுவாமியை, "மாடக்குளக்கீழ் மதுரோதய வளநாட்டு மதுரையில் திரு ஆலவாய் உடைய நாயனார் திருக்கோயில்" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மனை, "திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்" என்றே குறிப்பிட்டுள்ளனர். 1898ம் ஆண்டின் கல்வெட்டில் தான் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என்று இப்போது நாம் குறிப்பிடும் பெயர் காணப்படுகிறது.

சீர்பாதம் தாங்கும் தொழிலாளர்கள் போராட்டம் :

கிபி 1710ல் விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் சுவாமிகளின் பல்லக்கை சுமக்கும் சீர்பாதம் தாங்கும் தொழிலாளர்கள் 64 பேருக்கு  சாமநத்தம் உள்ளிட்ட 4 கிராமங்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன. அவரது ஆட்சிக்கு பின்னால், அந்த கிராமங்கள் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்து சீர்பாதம் தாங்கிகள் கோயில் முன்பாக போராட்டம் நடத்தினர்.

அப்போது குட்டி என்பவர் சொக்கநாதர் சன்னதிக்கு நேரே உள்ள வாயில் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து இறந்தார். அதனால், அப்பகுதியில் பக்தர்கள் செல்வது நிறுத்தப்பட்டது. அந்த வாயிலில் பக்தர்கள் செல்வது நிறுத்தப்பட்டதால் திருமலை நாயக்கர் காலத்தில், அம்மன் சன்னதிக்கு நேரே அமைக்கப்பட்ட வாயில் வழியாக தான் நாம் தற்போது சென்று கொண்டிருக்கிறோம்.

சோழவந்தான் கிராமத்தின் உண்மையான பெயர் :

கிபி 946 - 966 வரை ஆட்சி செய்த வீரபாண்டியன் என்ற மன்னன் சோழ மன்னன் ஒருவனின் தலை கொண்டதை குறிக்கும் வகையில் 'சோழாந்தக சதுர்வேதி மங்கலம்' என குறிக்கப்பட்ட பெயரே பின்னாளில் 'சோழவந்தான்' என பெயர் மாறியுள்ளது. சோழவந்தான் ஊரின் ஆதிபெயர் பாகனூர் கூற்றம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சோழர்கள் செய்யாததும், செய்ததும் :

சோழர்கள் 200 ஆண்டு காலம் மதுரையை ஆட்சி செய்துள்ளனர். எந்த மன்னரும் மீனாட்சி கோயிலுக்கு எந்த திருப்பணிகளையும் மேற்கொள்ளவில்லை. 3ம் குலோத்துங்கன் - 'முடிகொண்ட சோழபுரம்' என மதுரையின் பெயர் மாற்றினான். ஆனால், அந்த பெயர் நிலைக்கவில்லை.

ராஜராஜசோழன் சோழவந்தான் பெயரை 'ஜனநாத சதுர்வேதி மங்கலம்' என மாற்றினான். அதுவும் நிலைக்கவில்லை.

நில தானம் பற்றிய குறிப்பு:

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாத்தியமாக சோழவந்தான், வாடிப்பட்டி, காரியாபட்டி, இளையான்குடி உள்ளிட்ட 80 கிராமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. திருமலை நாயக்கர் பஞ்ச கம்மாளர்களுக்கு சில கிராமங்களை தானமாக அளித்துள்ளார். மடங்கள் கட்டி அவை இயங்குவதற்கு நிலங்கள் கொடுக்கப்பட்டதை 2 கல்வெட்டுகள் குறிக்கின்றன.

மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டு

பிற குறிப்புகள் :

தேவராயர் காலத்தில் சாதி வரி என்ற வரி நீக்கப்பட்டு உள்ளதற்கான குறிப்புகள் உள்ளன. பிராமணர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன. அதில் 'நாவித பிராமணர்' என்றும் ஒரு குறிப்பு உள்ளது. மறவர், பறையர் தொடர்பான குறிப்புகள் உள்ளன. மறவர்கள் நிலவுடைமை சமுதாயமாக இருந்ததும் தெரிய வருகிறது.

இவ்வளவு பெரிய மீனாட்சி கோயில் கல்வெட்டுக்களில் அரசியல் வரலாறு பற்றியோ மக்கள் வாழ்வு பற்றியோ எந்த செய்தியும் இல்லை என்று தெரிவிக்கும் சாந்தலிங்கம், 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் வேளாண் சமுதாய எழுச்சிக்கு பின்னர் அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டே பெண் தெய்வங்கள்/கிராம பெண் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுவாமிக்கு இணையாக அம்மனுக்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகிறார்.

Published by:Karthi K
First published:

Tags: Madurai, Temple