மதுரை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான். இக்கோவிலின் கிழக்கு கோபுரம் அருகே பழமை வாய்ந்த தளமான வீரவசந்தராய மண்டபம் உள்ளது. 1635 ல் மதுரையை ஆட்சி புரிந்த மன்னர் திருமலை நாயக்கரால் 333 அடி நீளமும்,15 அடி அகலமும், 25 அடி உயரமும் கொண்ட இம்மண்டபம் கட்டப்பட்டது.
இம்மண்டபத்தில் நான்கு வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூண்களிலும் பாரம்பரியமான, கலைநயம்மிக்க சிற்பங்கள் காட்சியளிக்கின்றது. ஒவ்வொரு சிற்பங்களும் நேர்த்திமிக்கவையாகவும், அழகாகவும் செதுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, தடாகை பிரட்டி, பத்திரகாளி, யாழிகள், குதிரை வீரர்கள் போன்ற சிற்பங்கள் காண்போரை அழகுற செய்கின்றது.
மேலும் மண்டபத்தின் மையப் பகுதியில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது. இக்கல் மேடையில் சித்திரை மாதம் என்னும் இளவேனிற்கால திருவிழாவின்போது மீனாட்சி அம்மனுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.
இதனால் இத்திருவிழா வசந்த விழா என்று கூறப்படுகின்றது. இதனால் இம்மண்டபத்திற்கு வசந்த மண்டபம் என்ற பெயரும் உண்டு. தற்பொழுது காலப்போக்கில் மாறி புது மண்டபம் என்ற பெயரில் வணிக வளாகமாக மாறியது.
மண்டபத்தின் தென் பகுதியில் பாத்திரக்கடைகளும், வடபகுதியில் புத்தக கடைகளும், பிற பகுதியில் தையல் கலைஞர் கடை, கோவில் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்கள், ஆபரணங்கள் போன்ற அனைத்து வகையான பொருட்களையும் வாங்கிச் செல்லும் இடமாக இருந்தது. சொல்லப்போனால் மதுரை மக்கள் மட்டும் இன்றி வெளி மாவட்டங்களிலும் இருந்தும் கூட அதிகமான மக்கள் இங்கு வந்து தான் பொருட்களை வாங்கி செல்வது வழக்கமாகவே இருந்தது.
ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முக்கியமான இடங்களில் ஒன்றாக கருதப்படும் புது மண்டபம் தற்பொழுது பொலிவிழந்து காணப்படுவதால் இந்து சமய அறநிலைத்துறை புது மண்டபத்தை புனரமைக்க முடிவு செய்தது. இதனால் அங்கிருந்த கடைகள் கடந்த சில மாதத்திற்கு முன்பு அப்புறப்படுத்தப்பட்டு அருகே உள்ள குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டது.
சுமார் நூறு ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையினராக புது மண்டபத்தில் வியாபாரம் நடத்தி வந்த மக்களிடையே இந்நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தினாலும் நமது வரலாற்று பக்கங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றது. ஆம்! இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர் முதற்கொண்டு காண்போருக்கான சுற்றுலா தளமாக மாற்றி அமைக்கப்படுகின்றது. ஆகச்சிறந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்ட நுணுக்கமான சிற்பங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்கள் கொண்ட புது மண்டபம் 'புதுமைமிக்க வரலாற்று மண்டபமாக' மாறிவிடும்.
செய்தியாளர்: யுவதிகா, மதுரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai