ஹோம் /நியூஸ் /மதுரை /

மொபைல் தடைக்கு எதிர்ப்பு முதல் மேயர் முற்றுகை வரை.. மதுரை மாநகராட்சி கூட்ட சர்ச்சைகளும், சலசலப்பும்!

மொபைல் தடைக்கு எதிர்ப்பு முதல் மேயர் முற்றுகை வரை.. மதுரை மாநகராட்சி கூட்ட சர்ச்சைகளும், சலசலப்பும்!

மதுரை மேயர் தலைமையிலான கூட்டத்தில் சலசலப்பு

மதுரை மேயர் தலைமையிலான கூட்டத்தில் சலசலப்பு

Madurai Corporation meeting | மதுரையில் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல சர்ச்சைகளும், சலசலப்பு ஏற்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்ட விவாதத்தின் போது, இல்லாத கடைக்கு வாடகை கேட்கப்பட்டதாகவும், காவல்நிலையத்தில் 27 ஆண்டுகளாக வாடகை வசூலிக்காமல் உள்ளதாகவும் வார்டுக்கு நிதி புறக்கணிக்கப்படுவதாகவும் கவுன்சிலர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளால் சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியின் 14வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி, ஆணையர் சிம்ரன் ஜித் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கடந்த மாமன்ற கூட்டத்திலிருந்து மாமன்ற உறுப்பினர்கள் மொபைல் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பு கூட்டத்தில் அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து, பெரும்பாலானோர் மொபைலுடன் கூட்ட அரங்கிற்குள் வந்தனர்.

கூட்டம் துவங்கியவுடன் பேசிய அதிமுக உறுப்பினர் குழு தலைவர் சோலை ராஜா, "கடந்த 25ம் தேதி திமுக கவுன்சிலர்கள் மற்றும் மேயர் ஆகியோருடன் தனியார் ஓட்டலில் அமைச்சர் நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று ரகசியமாக நடத்தப்பட்டிருந்தது. கட்சி சார்பில் நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு எதற்காக மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர் இது அலுவல் ரீதியான கூட்டம் என்றால் ஏன் அனைத்து உறுப்பினர்களையும் அழைக்கவில்லை" என கேள்வி எழுப்பினர். இந்த விவாகாரம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் பேச கூடாது என எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பியதால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இல்லாத கடைக்கு வாடகை:

வார்டு 49 திமுக உறுப்பினர் செய்யது அபுதாகிர் பேசுகையில்,

"2019ல் பெரியார் பேருந்து நிலையம் இடிக்கப்பட்ட போது அங்கிருந்து அகற்றப்பட்ட கடைகளுக்கு 2019-2021 வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து மொத்தம் ரூ.26,272 வாடகை பாக்கி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இல்லாத கடைக்கு எப்படி வாடகை செலுத்த முடியும்?" என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் தெரிவித்தார்.

• மாநகராட்சி இடத்தில் தனியாருக்கு பட்டா:

வார்டு 67 திமுக உறுப்பினர் நாகநாதன் பேசுகையில்,

"ஹெச்.எம்.எஸ் காலனி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 46 சென்ட் நிலம் 2018ல் தனி நபர் ஒருவருக்கு பட்டா மாற்றப்பட்டுள்ளது. இந்த பட்டா பெறுவதற்கான தடையில்லா சான்று அப்போது மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு சார்ந்த கோட்டாட்சியரின் விசாரணைக்கு மாநகராட்சி வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் அது தனி நபருக்கே சாதகமாகி விட்டது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தனி நபருக்கு சாதகமாக செயல்பட்டு மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்" என்றார். இதற்கும் விசாரணை நடத்துவதாக ஆணையர் தெரிவித்தார்.

• டைடல் பார்க் இடமாற்ற கோரிக்கை:

வார்டு 58 திமுக உறுப்பினர் ஜெயராம் பேசுகையில்,

"மாநகராட்சி இடத்தில் செயல்பட்டு வரும் கரிமேடு காவல் நிலையம் 1995 முதல் இதுவரை 56 லட்சத்து 92 ஆயிரத்து 470 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை இதுவரை வசூலிக்காமல் இருந்தது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசுகையில், "சென்னை மாநகராட்சியில் இருப்பது போல மதுரை மாநகராட்சியிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் அது குறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு ஏதுவாக இப்படி ஒரு துறையை அவசியம் உருவாக்க வேண்டும்" என்றார்.

மேலும், "மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டமாக 10 ஏக்கர் பரப்பில் டைடல் பார்க் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மாட்டுத்தாவணி பகுதியில் பேருந்து நிலையம், சந்தை, மருத்துவமனை உள்ளிட்டவைகளால் ஏற்கனவே வாகன நெருக்கடி உள்ள நிலையில், டைடல் பார்க் அமைப்பதால் மேலும் வாகன நெருக்கடி அதிகரிக்கும் எனவும், அதனால் டைடல் பார்க்கிற்கு வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

• வார்டுக்கு நிதி புறக்கணிப்பு:

வார்டு 62 சுயேட்சை உறுப்பினர் ஜெயச்சந்திரன், மத்திய மண்டலத்தில் உள்ள அவரது வார்டுக்கு மட்டும் எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு வைத்தார்.

இதனை தொடர்ந்து, திடீரென கூட்டம் நிறைவடைந்ததாக மேயர் இந்திராணி அறிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள் பலரும் மேயரை சூழ்ந்து கொண்டு பலருக்கு பேச வாய்ப்பளிக்காமல் கூட்டத்தை நிறைவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டபடி முற்றுகையிட்டனர்.

மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொறுப்பேற்றது முதல் இதுவரை நடைபெற்றுள்ள 14 கூட்டங்களிலும் சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்த கோரிக்கைக்களே பெருவாரியாக முன்வைக்கப்பட்டு வருவதும், அதை நிறைவேற்றுவதில் தொடர்ந்து அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: வெற்றிவேல், மதுரை.

First published:

Tags: Local News, Madurai, Mayor