மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக செல்லூர், தத்தனேரி, எஸ்.எஸ்.காலனி, கூடல் புதூர் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், பாலமேடு, பொதும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் பசு மாடுகளை மர்ம கும்பல் ஒன்று கடத்தி வந்தது. இரவு நேரத்தில் நம்பர் பிளேட் இல்லாத சரக்கு வாகனத்தில் வந்து வீட்டின் வெளியேயும், தொழுவத்திலும் கட்டப்பட்டிருக்கும் மாடுகளை வாகனத்தில் ஏற்றி, தார்ப்பாய் கொண்டு மறைத்து கடத்துவதே இவர்களது பாணி.
இப்படி, ஒவ்வொரு மாடுகள் காணாமல் போகும் போதும் அதன் உரிமையாளர்கள் சிசிடிவி காட்சிகளுடன் காவல் நிலையங்களில் புகாரளித்தனர். மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாடுகள் காணாமல் போனதாக பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மாடுகளை கடத்தும் மர்ம கும்பல் குறித்த துப்பு கிடைக்காமல் போலீசார் குழம்பி வந்த நிலையில், அந்த கும்பலை சேர்ந்த ஒருவரின் முகம் அலங்காநல்லூர் அருகேயுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அதன் மூலம் கடத்தல் கும்பல் வடமாநில நபர்களால் இயங்கி வருகிறது என்பது உறுதியான நிலையில் தேடுதலை தீவிரப்படுத்தியது மதுரை போலீஸ்.
சோதனை சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 11 அன்று இரவு கூடல் புதூர் சோதனை சாவடியை கடக்க முயன்ற கடத்தல் சரக்கு வேனை, சார்பு ஆய்வாளர் தவமணி நிறுத்த முயன்ற போது வேன் நிற்காமல் அதிவேகமாக சென்றதில், தவமணிக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னர் குற்றவாளிகளை தேடும் பணியில் தனிப்படை முழுவீச்சில் களமிறங்கியது.
இந்த விபத்தை ஏற்படுத்திய அன்றே அந்த கும்பல் மேலும் சில மாடுகளை கடத்தி விட்டு பரவை பகுதி வழியாக மதுரையை விட்டு தப்பி சென்றதும், அவர்கள் தாராபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்த நிலையில் தாராபுரம் விரைந்த தனிப்படை கடத்தல் கும்பலை கூண்டோடு கைது செய்தது.
விசாரணையில், அவர்கள் ஐவரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாகுல், சுபீர், நாசர், இர்பான், ஹமுதீன் என்பதும், மதுரையில் கடத்தும் மாடுகளை தாராபுரம் கொண்டு சென்று அங்கிருந்து கேரளாவுக்கு இறைச்சி கடைகளுக்கு மலிவு விலைக்கு ஏற்றுமதி செய்து வந்ததும் தெரியவந்தது. கடத்தல் கும்பல் பயன்படுத்திய இரண்டு சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார் ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Jallikattu, Local News, Madurai