மதுரை - திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் பல ஆண்டுகளாக இயங்கிவந்தது. மதுரை சுத்துவட்டார பகுதியிலிருந்து தினமும் வேலைக்காகவும், கல்விக்காகவும் மதுரை வருவோர் நலன் கருதி இயக்கப்பட்டு வந்தது. 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவலை காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது.
2021 மற்றும் அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகும் இந்த மதுரை - திண்டுக்கல் பயணிகள் ரயில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மதுரை - திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் போக்குவரத்தை, வருகிற ஜூலை 10-ம் தேதி முதல் இரு மார்க்கங்களிலும் மீண்டும் தொடங்குவது என்று ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முன்பு இந்த ரயிலால் மதுரையை சுற்றியுள்ள ஏராளமான கிராமப்புற பயணிகள் பயனடைந்து வந்தனர். சோழவந்தான், வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்களுக்கு இந்த ரயில் அவசியமானதாக இருந்தது. எனவே, தொடர்ந்து இந்த ரயிலை இயக்க வேண்டும் என்று சோழவந்தான் பயணிகள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த ரயிலில் சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தினசரி பயணம் செய்து வந்தனர்.
இந்நிலையில் இந்த ரயிலை மீண்டும் இயக்குவதாக தெற்கு ரயில்வேயிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சோழவந்தான் பகுதி பயணிகளிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து 10-ம் தேதி முதல் தினமும் காலை 8 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (06609) காலை 9.20 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து (06610) மாலை 6.10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், இரவு 7.45 மணிக்கு திண்டுக்கல் செல்லும். இந்த ரயில்கள் அம்பாத்துரை, கொடை ரோடு, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், கூடல் நகரில் நின்று செல்லும். இந்த தகவலை மதுரை கோட்ட ரயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
இந்த ரயிலில் 11 பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டியுடன் இணைந்த பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai