முகப்பு /செய்தி /மதுரை / மது அருந்தி வாகனம் ஓட்டிய மாணவர்களுக்கு நூதன தண்டனை விதித்த மதுரை நீதிமன்றம்!

மது அருந்தி வாகனம் ஓட்டிய மாணவர்களுக்கு நூதன தண்டனை விதித்த மதுரை நீதிமன்றம்!

மாதிரி படம்

மாதிரி படம்

High Court Madurai Bench : மதுரையில் மது அருந்தியபடி வாகனம் ஓட்டிய வழக்கில் முன் ஜாமின் கோரிய கல்லூரி மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நூதன தண்டனை விதித்துள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை தெற்கு தாலுகா சாத்தமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி இருளாண்டி அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், “சமூக ஊடகங்களில் ஒரு வைரல் வீடியோ பரவி வந்தது. அதில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஹெல்மெட் அணியாமல் பொறுப்பற்ற முறையில் அபாயகரமான முறையில் இரு மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்கின்றனர். மேலும், பைக்கில் வேகமாக சென்றபடியே, மதுபாட்டில்களை வைத்திருந்து குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து புகாரின் அடிப்படையில் மதுரை அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே அவர்களை கைது செய்யவேண்டும்” என கூறியிருந்தார்.

இந்நிலையில், மாணவர்களின் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், “இந்த வழக்கில் பின் விளைவுகளை யோசிக்காமல் மாணவர்கள் செய்து விட்டனர். எனவே, அவர்களுக்கு முன்  ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களின் வழக்கறிஞர்கள் தரப்பில், “கல்லூரி மாணவர்கள் விளைவுகளை புரிந்துகொள்ளாமல்,  வாலிப வயதின் உற்சாகத்தில், பின் விளைவுகளை அறியாமல் சமூக ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கில் குடித்துகொண்டே பைக்கில் வேகமாக  சென்றுள்ளனர்.

அப்போது, அதனை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றமும் செய்துள்ளனர். மேலும் IPC  308-வது பிரிவின் கீழ் உள்ள குற்றத்தை தவிர, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மற்ற குற்றங்கள் ஜாமீன் பெறக்கூடியவை. எனவே மாணவர்கள் தங்கள்  செயலுக்கு  வருத்தம் தெரிவித்துள்ளனர். இனி மேல் இதுபோன்று நடக்காது. இந்த வழக்கில், மனுதாரர்களான கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.  எனவே மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

இதையும் படிங்க  : பர்தா அணிந்து நகைக்கடையில் நூதன முறையில் திருட்டு.. சென்னையில் தாய், மகன் கைது..!

மேலும், மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவும், இந்த நீதிமன்றத்தால் விதிக்கப்படும் எந்தவொரு கடுமையான நிபந்தனைக்கும் கட்டுப்படவும் தயாராக உள்ளனர். இதனால், மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டனர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “மனுதாரர்கள் வாகனம் ஓட்டும்போது மதுபாட்டில்களை பிடித்துக்கொண்டும், மது அருந்திக்கொண்டும் மோட்டார் சைக்கிள்களை அலட்சியமாக. வேகமாக  ஓட்டிச் சென்றுள்ளனர். அந்த காட்சியை வீடியோவும் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இது  பொறுப்பற்ற செயல். இந்த வீடியோ சமூக ஊடகங்களில்   வைரலாக பரவியது. இந்த வீடியோ மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் பீதியை உருவாக்கியது. பொதுமக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது. இளைஞர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக உள்ளது. எனவே மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது” என வாதிட்டார். இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த  நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவை பார்த்தேன். அதில் மாணவர்கள் மது அருந்தி கொண்டே, சினிமா பாடலுடன் பைக்கை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். பொதுமக்களுக்கு எரிச்சலூட்டி, இடையூறு விளைவிக்கும் மோசமான நடத்தையாக பார்க்கப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் குற்றப் பின்னணி இல்லாத இளைஞர்கள்.  அதே நேரத்தில் பின் விளைவுகளை புரிந்து கொள்ளாமல் சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் விதிகளை மீறி ஒழுங்கீனமாக நடந்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த செயலையும் செய்ய மாட்டோம் என்றும், நல்ல நடத்தை மூலம் தங்களை தகுதியான குடிமக்களாக நிரூபிப்போம் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். எனவே, கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கும் நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கப்படுகிறது.

மேலும் பைக்கில் மது அருந்தியபடி வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்த கல்லூரி மாணவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள விபத்து சிகிச்சை பிரிவு வார்டில், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8.00 மணிக்கு, மதியம் 12.00 மணி வரை விபத்து சிகிச்சை பிரிவு வார்டில் தங்கியிருந்து, நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். விபத்து சிகிச்சை  பிரிவு வார்டில் 4 வாரம் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி  நீதிபதி உத்தரவிட்டார்.

First published:

Tags: Crime News, Local News, Madurai