Home /News /madurai /

எதற்காக மேயராக உள்ளீர்கள்? கொந்தளித்த திமுக கவுன்சிலர் - சர்ச்சைகளுடன் முடிந்த மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!

எதற்காக மேயராக உள்ளீர்கள்? கொந்தளித்த திமுக கவுன்சிலர் - சர்ச்சைகளுடன் முடிந்த மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!

மதுரை மேயர்

மதுரை மேயர்

Madurai Corporation Meeting : மதுரை மாநகராட்சியின் 9வது மாமன்ற கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில், திமுக உறுப்பினர் வார்டில் எந்தவித அடிப்படை பணிகளும் நடைபெறுவதில்லை என்று கூறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார். கூட்டத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

மேலும் படிக்கவும் ...
மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கூட்டணி, எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பளிக்காததால் ஏற்பட்ட அமளி, நிதி ஒதுக்காததை கண்டித்து பாஜக உறுப்பினர் செய்த ஆர்ப்பாட்டம், குளறுபடிகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மான அறிவிப்பு என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

மதுரை மாநகராட்சியின் 9வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், துணை மேயர் நாகராஜன் முன்னிலையில் அண்ணா மாளிகை அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டம் துவங்கிய உடனேயே புதிய தீர்மான அறிவிப்புகள் வாசிக்கப்பட்ட போது, தீர்மான நகல்கள் கிடைக்கவில்லை எனக்கூறி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கூச்சல் எழுப்பியதால் தீர்மான அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டு கேள்வி நேரம் துவங்குவதாக மேயர் அறிவித்தார்.

கேள்வி நேரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி உறுப்பினர்களுக்கு கூட பேச வாய்ப்பு அளிக்கவில்லை என கூறி அக்கட்சி உறுப்பினர்கள் கூட்டாக எழுந்து கோரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், பேச விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வாய்ப்பு அளிப்பதாக மேயர் உறுதி அளித்ததை தொடர்ந்து உறுப்பினர்கள் அமைதியாயினர்.

கேள்வி நேரத்தில் பேசிய மண்டல தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் பாதாள சாக்கடை பிரச்னை, குடிநீர் மற்றும் சாலை பிரச்னை ஆகியவற்றை பிரதான பிரச்னைகளாக முன்வைத்து பேசினர். 23வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் குமரவேல் பேசுகையில்,"தற்காலிக அடிப்படையில் தூய்மை பணியாளர்களை நியமிக்க கூடாது எனும் நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையிலும், 96 மாநகராட்சி பள்ளிகளுக்கு 120 தூய்மை பணியாளர்களை வெறும் 89 நாட்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணியமர்த்துவது தவறு. அவர்களையும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 63 வாகன ஓட்டுனர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

சொத்து வரி உயர்வு மறு சீராய்வு செய்யாமல், மக்கள் கருத்து கேட்காமலேயே அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளார்கள். எனவே, சொத்து வரி உயர்வு முடிவை கைவிட வேண்டும். அதேநேரம், பல தனியார் நிறுவனங்கள்  கோடிக்கணக்கான சொத்து வரி பாக்கி வைத்துள்ளது. அதை முழுமையாக வசூலிக்க வேண்டும்” என்றார்.

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம்


2 வது வார்டு திமுக உறுப்பினர் அமுதா பேசுகையில்,
“வார்டில் எந்தவித அடிப்படை பணிகளும் நடைபெறுவதில்லை. அதிகாரிகள் யாரும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மாமன்ற உறுப்பினர்களை கொஞ்சம் மதியுங்கள். தெரு தெருவாக செல்வது நாங்கள் தான். அதிகாரிகள் போல ஏசியில் அமர்ந்து வேலை செய்யவில்லை. அதிகாரிகள் என்னுடைய அலைபேசி அழைப்பை ஏற்பதே இல்லை. நானும் திமுக கவுன்சிலர் தான். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள், எதற்காக உங்களை மேயராக உட்கார வைத்துள்ளோம்?” என மேயரை நோக்கி ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார்

அதிமுக மாமன்ற குழு தலைவரும், 64 வது வார்டு உறுப்பினருமான சோலை ராஜா பேசுகையில், “மக்கள் கருத்து கேட்ட பின்னரே சொத்து வரியை அமல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டும், சீராய்வு செய்யாமல் வரி விதிக்கப்படுகிறது. வரி விதிப்பில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. மண்டல வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பாரபட்சம் காட்டப்படுகின்றன. மத்திய மண்டலத்துக்கும், மேயரின் வார்டுக்கு மட்டும் 35 லட்சம் ரூபாய் நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

86வது வார்டு பாஜக உறுப்பினர் பூமா தனது வார்டுக்கு நிதி ஒதுக்கவில்லை எனக்கூறி கூட்டத்தை புறக்கணித்து மாநகராட்சியின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையில் நூதன முறையில் ஒட்டுப்போட்ட சட்டை அணிந்து, பதாகை ஏந்தி மன்றத்தின் வெளியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். இறுதியாக, புதிய வழக்கறிஞர்கள் நியமனம், சாலை பணிகளுக்கான திட்டங்கள், தூய்மை பணியாளர் பணிகளுக்கான டெண்டர் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் விவாதத்திற்கு வந்தன. இதில், சாலை பணிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள 12 தீர்மானங்களில் வார்டு எண் உள்ளிட்ட முழுமையான விபரங்கள் இல்லை எனவும், குளறுபடிகளுடன் கடைசி நேரத்தில் தீர்மான குறிப்புகள் கொடுத்ததால் அதை விவாதிக்க கூடாது என அதிமுக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாஜக ஆர்ப்பாட்டம்


73வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் போஸ் பேசுகையில், “சாலை பணிகள் தொடர்பான தீர்மானம் ஒன்றில் தனது சொந்த நிலம் குறித்த சர்வே எண் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், இதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே தீர்மானங்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

Must Read : கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை ஒரு நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை

இதனால், சாலை பணிகள் தொடர்பான 12 தீர்மானங்களும் ஒத்தி வைக்கப்பட்டு, தூய்மை பணிகளுக்கான ஒப்பந்த தீர்மானம் மட்டும் விவாதம் இன்றி ஏற்கப்பட்டது. மதுரை மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது முதல் இதுவரை 9 மாமன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கூட்டத்திலும் புதிய புதிய சர்ச்சைகள் எழுவதும், அறிவிப்புகளில் குளறுபடிகள் நிகழ்வதும் தொடர்கதையாக இருப்பது மக்களிடையே பெரும் வருத்தத்தை அளிப்பதாக கூறும் மாமன்ற உறுப்பினர்கள், இனிவரும் காலங்களிலாவது மாமன்ற கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் எனவும், நிர்வாக நடைமுறைகள் சீராக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: Madurai, Madurai corporation

அடுத்த செய்தி