மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தல்லாகுளம் பெருமாள்கோவிலில் சப்பர முகூர்த்த விழா விமரிசையாக நடைபெற்றது.
மதுரையில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் உலக பிரசித்திபெற்ற திருவிழாவாக சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது கள்ளழகர் கோயிலில் இருந்து அழகரை பக்தர்கள் மதுரை வைகை ஆற்றங்கரைக்கு சப்பரத்தில் சுமந்து கொண்டு வருவார்கள். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற மே மாதம் 5ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்தநிலையில் அழகர் கோவில் நடைபெறவுள்ள சித்திரை திருவிழாவையொட்டி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் இன்று சப்பர முகூர்த்த விழா நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கூடலழகர் கோவிலை சேர்ந்த பட்டர்களையும், நிர்வாகத்தினரையும் கள்ளழகர் கோவில் பட்டர்கள், நிர்வாகத்தினர்கள் அங்கு மகிழ்ச்சியோடு வரவேற்றனர். பின்னர் சித்திரை திருவிழா நடைபெற அனைத்து ஒத்துழைப்புகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து முக்கிய நிகழ்வாக கள்ளழகரை சுமந்து வரும் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு மேளதாளம் முழங்க பட்டர்கள் வேதமந்திரங்களை உச்சரிக்க, மூங்கில் சேகரிக்கும் பணி தொடங்கியது. பின்னர் ஸ்ரீதேவி, பூமிதேவியர், பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரிகள், பட்டர்கள், சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.