ஹோம் /நியூஸ் /மதுரை /

சிறார் பயிலரங்கம்.. கதை சொல்லல்.. ஓவியப் போட்டிகள்! - களைக்கட்டும் மதுரை புத்தகத் திருவிழா..!

சிறார் பயிலரங்கம்.. கதை சொல்லல்.. ஓவியப் போட்டிகள்! - களைக்கட்டும் மதுரை புத்தகத் திருவிழா..!

புத்தகத் திருவிழா - மதுரை

புத்தகத் திருவிழா - மதுரை

madurai | மதுரையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில் இலக்கியவாதிகள் மட்டுமல்லாது பெருந்திரளான மாணவர்களும் பங்கேற்றிருப்பது ஒரு கலாச்சார விழாவாக மையம் கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை தமுக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 200 க்கும் மேற்பட்ட புத்தக விற்பனையகங்கள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்குகின்றன.

அரங்கிற்கு நுழைவதற்கு முன்னதாக "மாமதுரை போற்றுவோம்" என்ற தலைப்பில் வைகை ஆறு, மதுரையின் மலைகள், கல்வெட்டுகள், திருவிழாக்கள், தொல்லியல் சிறப்புகள் மற்றும் மதுரைக்கும் மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்டோருக்கான தொடர்புகள் குறித்து விளக்கும் பிரத்யேக காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் பொன்னியின் செல்வன், வேள்பாரி, உடையார், கங்கை கொண்ட சோழன் போன்ற வரலாற்று நூல்களும், தூங்காநகர நினைவுகள் போன்ற மதுரையின் வரலாறு சார்ந்த நூல்களும், பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளும், மனு தர்மம் குறித்த நூல்கள் அதிகளவில் விற்பனையாவதாக பதிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாவதின் தாக்கத்தால் நாவலின் 5 பாகங்களும் 400 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை விதவிதமான கண்கவர் வண்ணப்படங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளன.மேலும், தமிழக அரசின் தொல்லியல் துறை, உலக தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புத்தக அரங்குகளும், பள்ளிக் கல்வித்துறை சார்பில் "இல்லம் தேடி கல்வி திட்டம்" குறித்த அரங்குகளும் வாசகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் 2 ஆண்டுகள் கழித்து நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி, வாசிப்புக்கு புத்துயிர் அளிக்கும் வகையிலும்,  நூல்கள் குறித்த தேடலை விஸ்தரித்து உள்ளதாகவும் இளம் வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து கல்லூரி மாணவி ரான்யா கூறுகையில் "கடந்த 3 நாட்களாக தொடர்ந்து புத்தக கண்காட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றேன், ஆன்லைனில் குறிப்பிட்ட புத்தகத்தை தான் வாங்க முடிகிறது. ஆனால் இங்கு புதிய நண்பர்களை, எழுத்தாளர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களை வாங்க முடிகிறது. நண்பர்களுடன் வருகையில் அந்த புத்தகம் குறித்த உரையாடலும், இலக்கிய ஆர்வம் இல்லாத நபர்களுக்கு வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் உருவாக்க முடிகிறது" என  தெரிவித்தார்.

தமிழகத்திலேயே முதல்முறையாக இந்தாண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியம், சினிமா உள்ளிட்ட பல்துறை அனுபவங்களை அளிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறார் பயிலரங்கம், சிறார் சினிமா, கதை சொல்லல் மற்றும் படைபூக்கப் பயிலரங்கம், பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் தனித்த கவனத்தை ஏற்படுத்தி உள்ளன.

சிறார் பயிலரங்கு வாயிலாக தென்னை ஓலையில் கைவினை பொருட்கள் செய்ய கற்றுக்கொண்டதாகவும், அதனை தனது வீட்டில் உள்ளோருக்கும் செய்து காண்பிக்க போவதாகவும் உற்சாகத்துடன் கூறுகிறார் பள்ளி மாணவர் அசோக்.

சிறார் பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர் சாவித்திரி கூறுகையில்,"கடந்த 2 நாட்களாக ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார்கள். குழந்தைகள் மொபைல், டிவி உள்ளிட்டவைகளில் மூழ்கியிருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு தேவையான வாசிப்பு தளத்தையும், நேரத்தையும் ஒதுக்கீடு செய்யும்பொழுது அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலை உணரமுடிகிறது" என்றார்.

புத்தக திருவிழாக்கள் எப்போதும் புத்தங்கள் சார்ந்து மட்டுமே இயங்கும் வழக்கத்திற்கு மாறாக, புது சிந்தனை போக்குடன் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான படைப்பு வாசலை திறந்து விட்டிருப்பதன் வாயிலாக மதுரை புத்தக திருவிழா ஒரு பெரும் கலாச்சார விழாவாக மாறியிருப்பதாக எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், "கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு புத்தக கண்காட்சியில் பங்கேற்று வருகிறேன். புத்தக கண்காட்சி என்பது ஒரு பெரிய சங்கமம். என்னென்ன புத்தகங்கள் தற்போது பதிப்பிற்கு வந்துள்ளன, எந்தெந்த புத்தகங்கள் விவாத பொருள்களாக மாறியுள்ளன என்பது குறித்து மக்கள் நேரடியாக தெரிந்து கொள்கிறார்கள். இந்தாண்டு புதிதாக நடத்தப்படும் படைப்பூக்க பயிலரங்கு கல்லூரி மாணவர்களுக்கு படைப்பு உலகிற்கான கதவுகளை திறந்துள்ளன. இது அடுத்த புத்தக திருவிழாவிலேயே கல்லூரி மாணவர்களின் நூல்களை காண்பதற்கான சாத்தியங்களை அளிக்கும் என தோன்றுகிறது" என எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Also see... ஆரணியில் சைவ உணவகத்தில் வாங்கிய சாப்பாட்டில் எலி தலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்...

மதுரை புத்தகத்திருவிழாவில் துவங்கியுள்ள பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான படைபூக்க பயிலரங்கு, இனி தமிழகத்தில் நடைபெறும் அனைத்து புத்தக திருவிழாவிலும் இடம்பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை இலக்கியவாதிகள் முன்வைத்துள்ளனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Book Fair, Madurai