Home /News /madurai /

Madurai | பாரம்பரிய நீர் பங்கீடு முறையை விவரிக்கும் 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

Madurai | பாரம்பரிய நீர் பங்கீடு முறையை விவரிக்கும் 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை கல்வெட்டு

மதுரை கல்வெட்டு

Madurai | மதுரையில் நீர் பங்கீட்டு முறையை விவரிக்கும் 16-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட வில்லூர் பெரிய கண்மாயில் தமிழரின் பாரம்பரிய நீர் பங்கீடு முறையை பறைசாற்றும் கி.பி 16ம் நூற்றாண்டை சேர்ந்த கலிங்கு கல்வெட்டு சமூக ஆர்வலர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வளர் முனீஸ்வரன் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் உவரி பெரிய கண்மாயில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கலிங்கு பகுதியில் லிங்க வடிவம் ஒன்று தனி தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது.

இக்கல்வெட்டை அவர்கள் எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி 16 நூற்றாண்டை சேர்ந்த நீர் பங்கீடு முறை கல்வெட்டு என்பதை கண்டறிந்தனர். உவரி பெரிய கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கிழக்கு பகுதியில் லிங்க வடிவம் கொண்ட தனி தூண் கல்லில் 5 அடி உயரம், 1 அடி அகலம், 6 வரி எழுத்து பொறிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

மதுரை கல்வெட்டு


இக்கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்தபோது காணியம் நீர் அளித்த பாணிக்கர் செய்த என்ற எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் இரண்டு வரிகள் முற்றிலும் தேய்மானம் ஏற்பட்டு காணப்படுகிறது. பெரிய கண்மாயில் நீர் நிரம்பிய பிறகு அருகேயுள்ள தென்னமநல்லூர், புளியங்குளம் கண்மாய்க்கு நீரோடை வழியாக செல்லும். இவ்வூர்க்கு பணிக்கர் என்ற இனக்குழுவினர் நீரை சரி பாதியாக பிரித்து கொடுக்கப்பட்டது என்பதை இக்கல்வெட்டு மூலம் அறியலாம்.

தற்போது கண்மாயிலிருந்து கலிங்கு வழியாக மறுகால் பாய்ந்தாலும் ஒரே மாதிரியான நீர் வெளியேறும் கட்டுமானம் அமைந்து இருப்பது மற்றொரு சிறப்பு. பண்டையத் தமிழர்கள், நீர் மேலாண்மையை சிறப்பாக பின்பற்றி மழைநீர் சேமிப்பு மற்றும் நீர்நிலைகள் போன்றவற்றோடு தொடர்புடைய பிற கட்டுமானங்களை உருவாக்கினார்கள். நீர் பங்கீடு முறை சங்க கால முதல் தொன்றுதொட்டு இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

கலிங்கு என்பது கண்மாய், ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகளில் நீர் முறைப்படுத்தி வெளியேற்றுவதற்கு கற்களைக் கொண்டு அமைக்கப்படும் கட்டுமானம். இது கலிங்கல், கலிஞ்சு என்று அழைக்கப்படும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நீர் பங்கீடு முறையை ஊராட்சி அமைப்புகளின் மூலம் உருவாக்கி மேலாண்மை செய்வதற்கு தனியாக கலிங்கு வாரியம் என்ற குழுவை ஏற்படுத்தி நிர்வாகம் செய்தார்கள் என தொல்லியல் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி