பொங்கலை முன்னிட்டு மதுரையின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் நடைபெறுகிறது. அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் ராஜன் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் 8 மணிக்கு போட்டி துவங்குகிறது. இந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் உற்சாகமாக பங்கேற்க உள்ளனர். சிறந்த மாடு பிடி வீரர், காளைக்கு கார், பைக் பரிசு வழங்கப்பட உள்ளன. காளைகளை சிறப்பாக அணைக்கும் வீரர்கள், சிறப்பாக விளையாடும் காளைகளுக்கு தங்க, வெள்ளி காசுகள், சைக்கிள், கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன.
போட்டி முறைகேடுகளை தவிர்க்க கியூ ஆர் குறியீடு, ஆதார் எண், புகைப்படத்துடன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. வீரர்கள் மது அருந்தியுள்ளனரா என்பன உள்ளிட்ட உடல் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர்தான் வாடியில் அனுமதிக்கப்படுவர். மாடுகள் உடலில் எண்ணெய், இரசாயன பவுடர் தடவப்பட்டுள்ளனவா, கண், மூக்கில் பொடி தூவப்பட்டு உள்ளனவா என்பன போன்ற பரிசோதனைகள் செய்த பின்னர் அனுமதிக்கப்படும். போட்டி முடிந்து வெளியே வரும் காளைகளின் உடல் பரிசோதனையும் இந்தாண்டு முதல் நடைபெறுகிறது.
காளைகள் பரிசோதனை செய்யும் இடம் முதல் மாடுகள் வெளியேறும் பகுதி வரை 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மரக்கட்டைகள் கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவ மையத்தில் 10 மருத்துவ குழுக்களும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும், கால்நடை துறையினரும் தயார் நிலையில் உள்ளன
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து சமுதாய பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆலோசனை குழுவின் மேற்பார்வையில் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கமிட்டி தொடர்பாக இரு தரப்பினர் இடையே நிலவும் முன்விரோதத்தின் காரணமாக சட்டம் ஒழுங்கை காக்கும் பொருட்டு அவனியாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு குறைந்தபட்ச பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மொத்தம் 1200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராவால் கண்காணிக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Avaniyapuram, Jallikattu, Madurai