முகப்பு /செய்தி /மதுரை / சித்தப்பா வீட்டுக்கு செல்லும் தென்காசி கிருத்திகா.. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

சித்தப்பா வீட்டுக்கு செல்லும் தென்காசி கிருத்திகா.. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

கிருத்திகா வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

கிருத்திகா வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

High Court Madurai Bench : காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண் கிருத்திகா தொடர்பான ஆட்கொணர்வு வழக்கில் கிருத்திகா கேரளாவில் உள்ள அவரது சித்தப்பா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

தென்காசி அருகே உள்ள கொட்டாக்குளம் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த  வினித்,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தென்காசியில் மரக்கடை வைத்துள்ள குஜராத்தை பூர்வீகமாக கொண்ட நவீன் படேல், மகள் கிருத்திகாவும், நானும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்தோம்.   இருவரும் கடந்த (2022 ) டிசம்பர் 27ம் தேதி நாகர்கோவிலில்  காதல் திருமணம் செய்து பதிவு செய்து கொண்டோம். கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி நவீன் பட்டேல் கும்பலுடன் வந்து என்னை தாக்கி, என் மனைவி  கிருத்திகாவை, அவரது விருப்பம் இல்லாமல் கடத்தி சென்றார். என் மனைவி எங்கே உள்ளார் என தெரியவில்லை.  அவரது உயிருக்கும்,  எனது உயிருக்கும்  ஆபத்து,  எனவே என் மனைவியை  மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றத்தில்  கடந்த வார விசாரணையின்போது,  கிருத்திகா உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். உயர்நீதிமன்ற உத்தரவுபடி கிருத்திகா தென்காசியில் உள்ள  காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். கிருத்திகாவிடம் செங்கோட்டை நீதிபதி பெற்ற வாக்குமூலம், சீலிட்ட கவரில் பிப்ரவரி 13ம் தேதி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சமர்பிக்கப்பட்டது. இந்த ஆட்கொணர்வு வழக்கு கடந்த 14ம் தேதி நீதிபதிகள்  ஜெயசந்திரன்,  ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து கிருத்திகாவின்  தாத்தா சிவாஜி  தரப்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ,கிருத்திகாவை எங்களிடம் அனுப்பி வையுங்கள். நாங்கள் பத்திரமாக பார்த்து கொள்கிறோம் என பிரமான பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், “கிருத்திகாவை கடத்தியது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. கிருத்திகாவின்  தந்தை, தாய், உறவினர்கள் அனைவருக்கும் இந்த கடத்தலில் தொடர்பு உடையவர்கள். எனவே, கடத்தியவர்களிடமே,  கிருத்திகாவை ஒப்படைப்பது நியாயமாக இருக்காது. கிருத்திகாவை கடத்தியது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே , கடத்தியவர்களிடமே கிருத்திகாவை ஒப்படைக்க கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.

தொடர்ந்து நீதிபதிகள் கிருத்திகாவை அவரது தாத்தாவிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தனர். இந்த  ஆட்கொணர்வு வழக்கு  நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன்  முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் தரப்பில்   அரசு தரப்பு வழக்கறிஞர், “கிருத்திகா கடத்தலில் அவரது பெற்றோர்,  தாத்தா உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர்களிடம் எப்படி ஒப்படைக்க முடியும்? வழக்கின் விசாரணை பாதிக்கும்.  எனவே கிருத்திகாவை அவரது தாத்தா சிவாஜியிடம்  ஒப்படைக்க கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், கிருத்திகா கடத்தப்பட்ட பிறகு முற்றிலும் முரணாக பேசுகிறார் எனவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள்,  ஆட்கொணர்வு மனுவை பொறுத்த அளவில் 18 வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண்ணை அவரது விருப்பம் இல்லாமல் காப்பகத்தில் தங்க வைக்க முடியாது. எனவே இந்த ஆட்கொணர்வு வழக்கை பொறுத்த அளவில்  உரிய முடிவெடுக்க வேண்டியது உள்ளது. அதே நேரத்தில்,    கிருத்திகாவின் தாத்தாவிடம் ஒப்படைத்தால் அவருக்கு பாதுகாப்பாக இருக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. எனவே கிருத்திகாவை  நண்பகல் 2:15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை  ஒத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை 3:30 மணிக்கு கிருத்திகா,  உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன்  முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகள், நீங்கள் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுடன் செல்லலாம். உங்கள் விருப்பம் குறித்து கைப்பட மனு எழுதி கொடுங்கள் என கூறினார். இதைத்தொடர்ந்து கிருத்திகா, கேரளாவில் உள்ள தனது உறவினர் சித்தப்பா வீட்டிற்கு செல்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அவர் 18 வயது நிரம்பியவராக உள்ளதால் அவர் யாருடன் செல்ல விரும்புகிறாரோ அவருடன்  செல்லாம். ஆனால் கிருத்திகாவின் பாதுகாப்பிற்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி  கேரளாவில் உள்ள அவரது உறவினர் சித்தப்பா வீட்டிற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டனர். மேலும்,  கிருத்திகாவை அவரது உறவினர்களுடன் அனுப்பி வைக்க போலீசார் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் நீதிபதிகள், “கிருத்திகா,  நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார் . நீதிபதி முன் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அவர் விருப்பபடி செல்லலாம். இந்த வழக்கு விசாரணைக்கு கிருத்திகா போலீசாரின் விசாரணைக்கு  முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

திருமணம் தொடர்பான வழக்குகளை புகார்களை உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்று கொள்ளலாம்” எனவும் உத்தரவிட்டனர். மேலும் கிருத்திகாவின் தாத்தா கடத்தியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் அவரது மனுவும் நிராகரித்து மனுதாரர் வினித்துடன் செல்லவும் தற்போது மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Madurai, Tamil News