ஜோக்கர் என கூட போட்டுக்கொள்ளுங்கள் ஆனால் ரவுடி என சொல்லாதீர்கள். கலைஞருக்கு கண்ணாடியும், எம்.ஜி.ஆருக்கு தொப்பியும் போல தனக்கு நகைகள் என வரிச்சூர் செல்வம் விளக்கமளித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வரிச்சூர் செல்வம், தனது காது முதல் கால் வரை அதிகமான ஆபரணங்கள் அணிந்து எப்போதும் நடமாடும் நகைக்கடை போல வலம் வருபவர். அந்த நகைகளுக்கான நிதி ஆதாரம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசியவர், "நான் அணிந்துள்ள நகைகள் அனைத்துக்கும் ஆண்டு தோறும் சரியாக வருமான வரி செலுத்தி உள்ளேன். நடப்பாண்டில் மட்டும் 45 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தி உள்ளேன். தற்போது என்னிடமுள்ள அனைத்து அசையும் சொத்துக்களும் என் மகள், மகன் பெயரில் உள்ளன. இவை தவிர என் தந்தை பெயரில் பல கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. என் குடும்பத்தினர் எனக்கு மாதம் 3 லட்சம் பாக்கெட் மணி கொடுக்கிறார்கள். நான் சம்பாதிப்பதில்லை, ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறேன்" என கூறினார்.
மேலும் “நான் ரவுடித்தனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. என் தந்தையை ஒருவர் கொலை செய்ததற்கு பதிலாக நானும் ஒருவரை கொலை செய்தேன். அதற்காக 10 ஆண்டுகள் ஜெயிலில் இருந்தேன். அவ்வளவு தான். ஜெயிலில் இருந்த காலத்தில் கூட தினமும் ரூ.3000 செலவு செய்து சாப்பிட்டேன். இப்போது நான் ரவுடி இல்லை. ரவுடியாக இருந்தால் இவ்வளவு நகையுடன் எப்படி தனியாக நடமாட முடியும்? என் பெயரை சொல்லி மிரட்டி பணம் வாங்குவதாக வரும் தகவல் தவறு. என்னை கண்காணிப்பதற்காக தனியாக ஒரு காவலரை நியமித்து உள்ளார்கள். அப்படியிருக்க எப்படி நான் குற்றச் செயல்களில் ஈடுபட முடியும்?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மதுரையிலிருந்த பழைய காவலர்கள் என் மீது ஜோடித்து பல வழக்குகளை பதிவு செய்து விட்டனர். அப்படி பதிவு செய்யப்பட்ட 70க்கும் மேற்பட்ட வழக்குகளில் 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றமற்றவன் என நிரூபித்து விட்டேன். 6 வழக்குகள் மட்டுமே தற்போது நிலுவையில் உள்ளன.
உங்களை எல்லாம் கும்புட்டு கேட்டுக்கிறேன் சாமி, நான் ரவுடி இல்லை. கலைஞருக்கு கண்ணாடியும், எம்.ஜி.யாருக்கு தொப்பியும் அடையாளமாக இருப்பது போல எனக்கு இந்த நகைகள் அடையாளமாக இருக்க வேண்டும் என நினைத்துதான் இப்படி சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
யாராவது வந்து இந்த நகைகளை கேட்டால் கழற்றி கொடுத்துவிட்டு போயிடுவேன். இப்படியிருக்கையில், என்னை ரவுடி என்று சொல்லி ஏன் சித்ரவதை செய்கிறீர்கள்?என்னை ஜோக்கர் என்று கூட போடுங்கள் ஆனால் ரவுடி என சொல்லாதீர்கள். நான் வெளியே வந்தால் 100 பேர் தினமும் என்னுடன் போட்டோ எடுப்பார்கள். அப்படித்தான் நடிகை காயத்ரி ரகுராமும் என்னுடன் ஒருமுறை போட்டோ எடுத்தார். அவரை ஒருமுறைதான் சந்தித்திருக்கிறேன். அவரைப்பற்றி திருச்சி சூர்யா தவறாக பதிவிட்டதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டு அந்த பதிவை நீக்கினார்" என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gold, Madurai, Murder case, Viral Video