Home /News /madurai /

மதுரைக்கு புதிய டைடல் பார்க்.. 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - தொழில்துறை மாநாட்டில் முதலமைச்சர் அறிவிப்பு

மதுரைக்கு புதிய டைடல் பார்க்.. 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - தொழில்துறை மாநாட்டில் முதலமைச்சர் அறிவிப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் - மதுரை

முதலமைச்சர் ஸ்டாலின் - மதுரை

Madurai | மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் எனவும், அதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" எனும் தலைப்பில் தெற்கு மண்டல அளவிலான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு துறை செயலாளர்கள், ஆட்சியர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பங்கேற்றனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை துவக்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கும், அந்நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கும் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும், தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறுவதை பதிவு செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமல் வங்கிகளில் இருந்தே ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் வசதியை துவக்கி வைத்தார்.

குறுந்தொழில் குழுமம் அமைப்பதற்கான ஆணை கடந்த 22-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மதுரை விளாச்சேரியில் ரூ.4.03 கோடி மதிப்பில் பொம்மை குழுமம், தூத்துக்குடியில் 100% மானியத்துடன் ரூ.2.02 கோடி மதிப்பில் ஆகாயத் தாமரை குழுமம், விருதுநகரில் ரூ.3.40 கோடி மதிப்பில் மகளிர் விசைத்தறி குழுமம் ஆகிய 3 குழுமங்கள் அமைப்பதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கான ஆன்லைன் வசதியை துவக்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில் "பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்" எனும் புதிய திட்டத்தை அதற்கான இளச்சினையை வெளியிட்டு முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்தாண்டு முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1.56 லட்சம் 9-12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 3120 ஆசிரியர்களுக்கும் தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படும்.

மாணவர் குழுக்களின் சிறந்த புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பால் வங்கிகளில் கடன் பெறமுடியாமல் தவிக்கும் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் CARE - தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரண திட்டம் என்கிற புதிய திட்டத்தை துவக்கி வைத்து முதல் பயனாளிக்கு ரூ.8.80 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

நான்காம் தலைமுறை தொழில் நுட்பத்திற்கு (Industry 4.0) குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் தயார் படுத்திக் கொள்வதற்கு பயிற்சி வழங்குவதற்காக இண்டோ அமெரிக்கன் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசின் Fame TN நிறுவனம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.மாநாட்டில் பேசிய முதலமைச்சர், "பாண்டியர் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை இன்று தொழில் வளர்ப்பிலும் முன்னணியில் உள்ளது. மதுரையில் இயங்கி வரும் 50,000 குறு சிறு நிறுவனங்கள் மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவை.இந்த பொருட்களுக்கு வெளி நாடுகளில் வரவேற்பு உள்ளதால் தொழில் நிறுவனங்கள் இதை அதிகம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும்.

நாட்டில் எளிமையாக தொழில் புரிவோர் பட்டியலில் 14 வது இடத்தில் இருந்து 3 வது இடத்திற்கு தமிழ்நாடு வந்துள்ளது. அடுத்து முதல் இடத்தை பெறுவது இலக்கு. தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்கன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றும் நோக்கில் அரசு இயங்கி வருகிறது.

தொழில் வளர்ச்சிக்கு தேவையான கொள்கைகளை வகுப்பதற்குண்டான தரவுகளுக்காக ஒன்றிய அரசின் சிறு, குறு நிறுவனங்கள் துறையும் தமிழக சிறு, குறு நிறுவனங்கள் துறையும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.

Also see...முதல் முத்தத்தை தவறாமல் கொடுங்கள் - திருச்சியில் கமல் பேச்சு

மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து புதிய டைடல் பார்க் அமைக்க உள்ளது. மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டமாக 10 ஏக்கரில் பூங்கா துவங்கப்படுகிறது. முதல் கட்டமாக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபடுகிறது. இந்த பார்க் அமைவதன் மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்" என தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: CM MK Stalin, Madurai

அடுத்த செய்தி