மதுரை மாவட்டத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காளவசல் சந்திப்பு முதல் கோச்சடை வரை மேம்பாலம் அமைக்கும் பணியானது கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.
கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையிலும் இது மதுரையில் இருந்து தேனி செல்லும் பிரதான சாலை என்பதால் பயணிகளுக்கும், அவ்வழியாக செல்பவர்களுக்கும் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. காலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதன் காரணமாக தரைச்சாலை மிகவும் சேதமடைந்து மணல் சூழ்ந்து காணப்படுகிறது.
இதுகுறித்து அங்கு கடை வைத்திருந்த திசைநாதன் என்பவரிடம் கேள்வி எழுப்பிய பொழுது இவ்வழியில் நிறைய பள்ளிகள் உள்ளதால் காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும், சாலையில் மணல் சூழ்ந்து உள்ளதால் வாகனங்கள் செல்லும்பொழுது புழுதி காற்று வீசுவதாகவும் மாஸ்க் அணியாமல் இங்கு அமரமுடியாது என்றும் கூறினார்.

புழுதி பறக்கும் சாலை..
வாகனஒட்டி சுந்தர் என்பவர் கூறியதாவது - இவ்வழியாக நான் தினமும் பணிக்கு செல்லும்பொழுதெல்லாம் வாகன நெரிசலைக் கடந்து செல்லும் நிலை தான் உள்ளது, தரையில் மணல் சூழ்ந்து உள்ளதால் லாரி, பேருந்து அல்லது பிற பெரிய வாகனங்கள் செல்லும் பொழுது கடும் புழுதி காற்று வீசும் அது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது என்றார்.
சாலையை மூடி இருக்கும் மணல் பரப்பை நீக்கவேண்டும், மேம்பாலம் கட்டிமுடிக்கப்படும் வரை தரைச்சாலையை தற்காலிக சீரமைப்பு செய்யவேண்டும் என்பதே அவ்வழியாக செல்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர்: அருண், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.