மதுரையில் கல்லூரி மாணவன் பெயரில் வங்கி கணக்கு துவங்கி ஏழு நாட்களில் 77 லட்ச ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்ற விவகாரம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் விக்னேஷ் என்ற மாணவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த சரண்தேவா என்பவர், தன்னை வங்கி ஊழியர் என்று அறிமுகம் செய்து கொண்டு வங்கியில் 'ஜீரோ பேலன்ஸ்' வங்கி கணக்கு மாணவர்களுக்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை நகல்களையும், மாணவரின் புகைப்படத்தையும் பெற்றுள்ளார்.
அதனை கொண்டு மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஐடிஎப்சி வங்கியில் மாணவன் விக்னேஷ் பெயரில் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்கப்பட்டு இரண்டு வாரத்திற்கு பின்பு மாணவன் ஆன்லைன் பேங்கிங் மூலம் தனது வங்கி கணக்கு விபரங்களை பார்க்கும் போது அதில் வேறு ஒரு நபரின் தொலைபேசி எண் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அவரது வங்கி கணக்கில் அவருடைய கவனம் இல்லாமலேயே பல லட்ச ரூபாய் கடந்த ஏழு நாட்களில் பரிவர்த்தனை செய்யப்பட்டதை அறிந்த விக்னேஷ், மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவன் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் கடந்த ஏழு நாட்களில் 77 லட்ச ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்ட நிலையில் வங்கி மேலாளர் யுவராஜ் மற்றும் உசிலம்பட்டியை சேர்ந்த சரண் தேவா ஆகிய இருவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர் வங்கி கணக்கின் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ள இந்த பணம் ஹவாலா பணமா என்ற கோணத்திலும், வேறு ஏதேனும் மாணவர்கள் பெயரில் இதே போல கணக்கு துவங்கி பண மோசடிகள் நடைபெற்றுள்ளனவா என்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: வெற்றி- மதுரை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank accounts, Cyber crime, Madurai