மதுரையைச் சேர்ந்த மோகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அவர்களுக்கு, 'வாக்கி டாக்கி' வழங்க, அரசு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, 2010ல், 'எல்காட்' என்ற, தமிழக மின்னணு நிறுவனம் பரிசோதனை அடிப்படையில் 3,300 மீனவர்களுக்கு, வாக்கி டாக்கி வழங்கியது. அவற்றுக்கு, தகவலை கொண்டு செல்ல வசதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில், கடற்கரையோரம், மூன்று மின் கோபுரங்களுடன் கட்டுப்பாட்டு அறைகளையும் அமைத்தது.
அதன் வழியே 80 கி.மீ., சுற்றளவு துாரத்தில் இருந்த மீனவர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடிந்தது. இது மிகப்பெரிய பலனை தந்தது. இதையடுத்து அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி வழங்க அரசு முடிவு செய்தது. இதற்காக உலக வங்கியிடம் 62.14 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது.
இத்திட்டத்தை எல்காட் நிறுவனம் செயல்படுத்த இருந்தது. ஆனால், மீன்வளத்துறை அதிகாரிகள் தங்கள் துறை சார்பில் திட்டத்தை செயல்படுத்துவதாக கூறி நிதியை பெற்றனர். இந்நிதியில், முதல் கட்டமாக 20,000 மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்க முடிவு செய்யப்பட்டது. இவற்றை கொள்முதல் செய்ய தொழில்நுட்ப நிபுணர்கள் இடம்பெற்ற குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், போலீஸ் அதிகாரி , பிஎஸ்என்எல் அதிகாரி போன்றோரும் இடம் பெற்றிருந்தனர்.
இக்குழு கூட்டத்தில் முதலில் வாக்கி டாக்கிகளை தொடர்பு கொள்ள வசதியாக மின் கோபுரங்களுடன் 13 மாவட்டங்களில் 21 கட்டுப்பாட்டு அறை அமைப்பது என்றும் அதன்பின் வாக்கி டாக்கிகளை கொள்முதல் செய்வது என்றும் முடிவானது. ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள் 2015ல் வாக்கி டாக்கி வாங்க, 'டெண்டர்' விட்டனர்.
அப்போது கட்டுப்பாட்டு அறை அமைக்க டெண்டர் விடப்படவில்லை. வாக்கி டாக்கி வழங்க, டில்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனம், 2016ல் வாக்கி டாக்கிகளை வழங்கியது. அத்துடன், மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு பெரும் தொகையை, கமிஷனாகவும் வழங்கியது.
அதைத் தொடர்ந்து, அதே நிறுவனத்திடம் மின் கோபுரம் அமைக்கும் பணியை ஒப்படைக்க, மீன் வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். அதற்காக மின் கோபுரம் அமைப்பதற்கான டெண்டரில் பல விதிமுறைகளை திருத்தினர். கொள்முதல் செய்யப்பட்ட வாக்கி டாக்கிகள், 'அனலாக்' முறையில் செயல்படக்கூடியவை. ஆனால், மின் கோபுரங்களை 'டிஜிட்டல்' முறையில் அமைக்க விதிமுறையில் திருத்தம் கொண்டு வந்தனர்.
Also see... 1000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்குபவருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்...
மீன்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு செய்த இந்த வேலையால் மற்ற நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து, பல நிறுவனங்கள் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பின. அதன் தொடர்ச்சியாக டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் மீண்டும் டெண்டர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின் கோபுரத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படாததால் வாக்கி டாக்கிகளை பயன்படுத்த முடியவில்லை. இத்திட்டத்தை, முறையாக செயல்படுத்தி இருந்தால், 'ஒக்கி' புயலில், மீனவர்கள் மாயமாவதை தடுத்திருக்க முடியும். அதிகாரிகள் செய்த தவறால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 'கொள்முதல் செய்யப்பட்ட, வாக்கி டாக்கிகள் தரமானவை அல்ல முறைகேடு நடந்து உள்ளது. தவறு செய்த அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மீனவர்களுக்கு வழங்கிய வாக்கிடாக்கி திட்டத்தில் 37 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. இதுகுறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் விசாரணை செய்ய மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு குறித்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கியில் நடைபெற்ற ஊழலை உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை செய்து முடிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி குமார் முன்நிலையில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மீனவர்கள் பயன்பாட்டிற்கான அதிநவீன வாக்கிடாக்கி வாங்கியதில் முறைகேடு குறித்து பல புகார்கள் வந்துள்ளது. மேலும் விசாரணையில் அரசுக்கு வாக்கிடாக்கி வாங்கியதில் அரசுக்கு 35.72கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீதான குற்ற சாற்றின் அடிப்படையில் விரிவான விசாரணை பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Also see... கோட்டூர்புரம் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் ஜிப்சி மக்கள் ... அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர தமிழக அரசுக்கு கோரிக்கை...
இந்த விசாரணை என்பது இன்னும் மூன்று மாத கால அவகாசம் வேண்டும் என விசாரணையின் நிலை அறிக்கை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனுதாரர் தனது மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறினார். இதனை ஏற்று நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.