இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்ட பயனாளிகளை கண்டறிவதாக மக்களை திமுக அரசு ஏமாற்றிக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள அண்ணாமலை, மதுரை ஆதீனத்தை தொட்டுப்பாருங்கள் மோடி என்ன செய்வார் என தெரியும் என அமைச்சர் சேகர்பாபுவுக்கு சவால் விடுத்துள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கூண்டுக்குள் ஏற்றுங்கள் என கேட்பேன் என்றும் பேசியுள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் முரளிதரன் பேசுகையில், சமீபத்தில் மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தான் அண்ணாமலைக்கு திமுக அரசின் ஊழல்கள் குறித்து தகவல்கள் கொடுத்தவர்கள். அதனால் தான் அதிகாரிகளை அரசு உடனடியாக மாற்றியுள்ளது.
70 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நம்பி அண்ணாமலை அரசியல் செய்யவில்லை. மக்களை நம்பி அரசியல் செய்கிறார். அதிகாரிகளை மாற்றினாலும் திமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் அண்ணாமலையின் பணி தொடரும் என்று கூறினார்.
கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், முதலமைச்சர் காவல் நிலையத்திற்கு ஆய்வு செய்ய சென்ற பின்னரே தமிழகத்தில் குற்றங்கள் அதிகமாயின. காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டு கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் திமுகவினர். பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நூதனமான ஊழலை ஆரம்பித்து உள்ளார். மதுரையில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரியை ஒரே நாளில் திண்டுக்கல்லுக்கு மாற்றி மீண்டும் மதுரைக்கே மாற்றியுள்ளார். தூத்துக்குடியில் உள்ள 2,500 ஏக்கர் நிலத்தை போலியாக பதிவு செய்தது கூட தெரியாமல், மதுரையில் ஜல்லி, மணல் எங்கு கிடைக்கும் என தேடிக் கொண்டு இருக்கிறார்.
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆனால், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர கூடாது என்கிறார். ஒரே மரத்தின் கீழ் நின்று கள்ளை குடித்து விட்டு இருவரும் இரு வேறு கருத்துக்களை சொல்கிறார்கள். மக்களை முட்டாள் ஆக்குவதில் பி.டி.ஆர். தான் சிறந்த உதாரணம்.
பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில், இல்லத்தரசிகள் யார் என்று கண்டுபிடித்து கொண்டு இருக்கிறோம் என்கிறார் அமைச்சர் பி.டி.ஆர். ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் 21 குழுவை உருவாக்கி சாதித்துள்ளது திமுக அரசு. இனி 22 ஆவதாக ஒரு குழுவை உருவாக்கி இல்லத்தரசிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பை அமைச்சர் பி.டி.ஆர். வசம் ஒப்படையுங்கள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, முதலமைச்சர் துபாய் சென்று வந்த பின்னர் அமைச்சர்கள் எல்லோரும் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். மின்துறை அமைச்சர் தற்போது ஸ்காட்லாந்து கடலில் காற்றாலை அமைப்பதை பார்வையிட போயுள்ளார். கடலில் காற்றாலை போட்டால் அணில் ஏறி போய் கடிக்க முடியாது. தமிழகத்தில் கரண்டு கொடுக்கவே வழியில்லை. சோலார் பிளான்ட் அமைக்கவே 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குகின்றனர்.
திமுக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததற்காக என் மீது இந்த ஓராண்டில் மட்டும் 620 கோடி ரூபாய் அளவுக்கு இதுவரை மான நஷ்ட ஈடு வழக்கு போட்டுள்ளார்கள். செந்தில் பாலாஜி என் மீது தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது முதலமைச்சர் ஸ்டாலினையும் கூண்டுக்குள் ஏற்றுங்கள் என கேட்பேன். அவர் தான் செந்தில் பாலாஜியை ஊழல் அமைச்சர் என குற்றம்சாட்டியவர் என்று குற்றம் சாட்டினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ராகுல் காந்தி, சோனியா காந்தி பண மோசடி செய்ததற்காக அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து உள்ளது என்று கூறிய அண்ணாமலை. வேலை இல்லாத காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி டெல்லியில் போய் சண்டை போட்டுவிட்டு சட்டை கிழிந்து விட்டது என்கிறார். சண்டையில் சட்டை கிழிய தான் செய்யும்.
Must Read : கொரோனாவுக்கு தஞ்சாவூரில் 18 வயது இளம்பெண் மரணம்.. 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழப்பு
திமுக அமைச்சர் சேகர் பாபு மதுரை ஆதீனத்தை பற்றி தவறாக பேச ஆரம்பித்த அன்றே கதை காலி. பழைய சேகர் பாபுவை பார்ப்பீர்கள் என்று மிரட்டுகிறார். கோவில் உண்டியல் மீது தான் திமுகவினருக்கு கண் என ஆதீனம் சொன்னதில் என்ன தவறு? ஆதீனத்தை மட்டும் தொட்டுப் பாருங்கள். மதுரை மக்களும், பாஜகவும், மோடியும் என்ன செய்வார்கள் என காண்பிப்போம். ஆதீனத்துக்கும் பாஜகவிற்கு சம்பந்தம் கிடையாது. ஆதீனம் மக்கள் பக்கம் நிற்பதால் அவரின் பக்கம் பாஜக நிற்கிறது இவ்வாறு கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.