Home /News /madurai /

அ.தி.மு.க உட்கட்சிப் பூசல்: அங்கீகாரக் கடிதம் கிடைக்காமல் சுயேட்சையாகும் அ.தி.மு.க வேட்பாளர்

அ.தி.மு.க உட்கட்சிப் பூசல்: அங்கீகாரக் கடிதம் கிடைக்காமல் சுயேட்சையாகும் அ.தி.மு.க வேட்பாளர்

வேட்புமனுத் தாக்கல் செய்த அ.தி.மு.க வேட்பாளர்

வேட்புமனுத் தாக்கல் செய்த அ.தி.மு.க வேட்பாளர்

மதுரையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளருக்கு தேர்தல் அலுவலர் இரு நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார்.

திருமங்கலம் அருகே செங்கப் படை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது அங்கீகார கடிதம் கொடுக்காத அதிமுக வேட்பாளருக்கு 30ஆம் தேதி வரை கெடு விதித்த தேர்தல் அதிகாரி தவறும் பட்சத்தில் சுயேட்சை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் செங்கப்படை ஒன்றிய கவுன்சிலர் பதவி வகித்து வந்த அதிமுக கவுன்சிலரான அன்னலட்சுமி அண்மையில் உடல் நலக்குறைவான உயிர் இழந்தார். இதனையடுத்து செங்கப்படை ஒன்றிய கவுன்சிலர் பதவி இடம் காலியாக இருந்தது. இந்நிலையில் காலியாக உள்ள செங்கப்படை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சியின் வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் உட்பட 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் பாஜக வேட்பாளர் கட்சியின் அங்கீகார கடிதம் வழங்கப்படவில்லை என்பதால் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அ.தி.மு.க வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த ராகிணி தேவி அ.தி.மு.கவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் கட்சியின் அங்கீகாரம் கிடைக்காமல் நேற்று தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு ஈபிஎஸ்-க்கு அதிகாரம் இல்லை.. தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்

இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் கட்சியின் அங்கீகார கடிதத்தை இணைத்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால் தற்போது அ.தி.மு.கவில் உட்கட்சி பூசல் நிலவி வருவதால் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மாவட்ட,ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அனைவரும் கட்சியின் அங்கீகார கடிதம் இல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் தாக்கல் செய்யப்பட்ட 11 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க வேட்பாளர் அங்கீகார கடிதம் வழங்காததால் வாபஸ் நாளான வருகிற 30-ஆம் தேதி சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாக அங்கீகார கடிதம் வழங்கினால் மட்டுமே இரட்டை இலைச் சின்னம் வழங்கப்படும் எனவும் தவறும் பட்சத்தில் அ.தி.மு.க வேட்பாளர் சுயேட்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனிச்சின்னம் வழங்கப்படும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்  இளங்கோ தெரிவித்தார்.

தற்போது அதிமுகவில் நிலவி வரும் சூழலால் அடுத்த இரு தினங்களுக்குள் கட்சியின் அங்கீகார கடிதம் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு அதிமுக வேட்பாளர்கள் இடையே நிலவி வருகிறது. இதனிடையே அங்கீகார கடிதம் இல்லாத அதிமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி திமுக வேட்பாளர் சார்பில் தேர்தல் அதிகாரி இளங்கோவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக திமுகவினர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

செய்தியாளர்: சிவகுமார் தங்கையா, மதுரை.
Published by:Karthick S
First published:

Tags: ADMK, Madurai

அடுத்த செய்தி