ஹோம் /நியூஸ் /மதுரை /

தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது அதிமுக தான் - முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சிற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி!

தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது அதிமுக தான் - முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சிற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி!

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

லேப்டாப் திட்டத்தை 2 ஆண்டுகள் வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தது அதிமுக தான் எனவும் திமுக ஆட்சியில் அது மீண்டும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

தாலிக்கு தங்கம் திட்டத்தை நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி 4 ஆண்டுகளாக வழங்காமல் நிறுத்தி வைத்தது அதிமுக ஆட்சி தான், நாங்கள் அதை மாற்றி கல்விக்கான தொகையாக வழங்கி வருகிறோம் என  தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கணேசபுரம் தெருவில் ரூ. 8.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதனையடுத்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

வளர்ச்சி, நிதி மேலாண்மை முக்கியம் தான் என்றாலும் மனிதாபிமானம் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்தி, பல்வேறு முகாம்கள் அமைத்து அவர்கள் நலனுக்கு மும்முரமாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

மேலும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு  இதுவரை இல்லாத அளவிற்கு  நிதி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. உள் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வழக்குகள் விசாரித்து வருகின்றனர்.  அதன் விளைவுகளை விரைவில் ஊழல் செய்தவர்கள் சந்திப்பார்கள் என தெரிவித்தார்.

மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், மின்சார கட்டணம் மற்றும் சொத்துவரியை உயர்த்தியதன் மூலம் தமிழ்நாடு அரசு வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அவர், இந்த வரிகள் சமீபத்தில் உயர்த்தப்பட்டவை, அது எப்படி கடந்த ஆண்டின் நிதி பற்றாக்குறையை குறைத்திருக்கும் என கேள்வி எழுப்பினார். மேலும் மின்சாரத்துறையின் வருவாய் மாநில வருவாய் கணக்கில் வராது எனவும் குறிப்பிட்டார்.

இதையும் வாசிக்க: அதிமுகவில் இணைவதாக வெளியான தகவல்... சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு..

மேலும் இலவச லேப்டாப் , தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களை  திமுக நிறுத்திவிட்டது என உதயக்குமார் பேசியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், லேப்டாப் திட்டத்தை 2 ஆண்டுகள் வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தது அதிமுக தான் எனவும் திமுக ஆட்சியில் அது மீண்டும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிதி பற்றாக்குறை காரணமாக 4 ஆண்டுகளாக அதிமுக நிறுத்தி வைத்திருந்தது எனவும் அதை புதுமை பெண் திட்டமாக மாற்றி, கல்லூரி மாணவிகளுக்கு கல்விக்கு உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் வருவாய் பற்றாக்குறை கட்டுக்குள் இருந்தது. 2016க்கு பிறகு தான் நிதி மேலாண்மை இல்லாத அரசாக செயல்பட்டுள்ளது என தெரிவித்தார். 8 வருடம் அதிமுக ஆட்சியில் சரிய விட்ட வருவாய் பற்றாக்குறையை 4 ஆண்டுகளில் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

இந்நிலையில் பெண்கள் இலவச பஸ் பயணம், பொங்கல் பரிசு, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Minister Palanivel Thiagarajan, R.B.Udhayakumar, Tamilnadu