மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதாக கூறி அதை இடமாற்றம் செய்யக் கோரியும், தேசிய நெடுஞ்சாலை 208 வழியாகச் செல்லும் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட வாகனங்களுக்கு கட்டண விலக்கு கோரி போராட்டம் நடத்தப் போவதாக 3 மாவட்ட கார், டாக்ஸி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய அரசின் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறி கப்பலூர் டோல்கேட் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரியும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த கார் டாக்ஸி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநில சாலை போக்குவரத்து குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் நடந்த, இந்தகூட்டத்திற்கு மதுரை மாவட்ட சாலை போக்குவரத்து குழு தலைவர் அரவிந்தன், விருதுநகர் மாவட்ட சாலை போக்குவரத்துக் குழு செயலாளர் திருமலை, ராஜபாளையம் டாக்ஸி ஓட்டுனர் சங்க தலைவர் தங்கவேலு, துணைத் தலைவர் விஜயகுமார், ஏஐடியூசி செயலாளர் சரவணன், மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் டோல்கேட்டை உடனடியாக மாற்றவும், தேசிய நெடுஞ்சாலை எண் 208 வழியாக செல்லக்கூடிய மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கட்டண சலுகை வழங்கவும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டதாக 3 மாவட்ட கார், டாக்ஸி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.