விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் பிரபல ரவுடியை கொலை செய்துவிட்டு நாடக மாடிய ரவுடியின் மனைவி மற்றும் மைத்துனரை போலீசார் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் சொக்கநாதன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டி என்ற மாடசாமி ( 45). இவர் காவல் துறையின் குற்ற பதிவேடுகளில் ரவுடியாக இருந்து வந்தார். இவர் மீது விருதுநகர் மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட அடிதடி, கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் இருந்து வந்துள்ளன. இவர் கடந்த 2017 ம் ஆண்டு முதல் காவல்துறையின் பார்வையில் அகப்படவில்லை. சொக்கநாதன் புத்தூர் பகுதியிலும் நடமாட்டம் இல்லை.
இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி குட்டி என்ற மாடசாமியின் மனைவி சுப்புலட்சுமி சேத்தூர் காவல் நிலையம் வந்து தனது கணவர் குட்டி என்ற மாடசாமி இறந்துவிட்டதாகவும், தான் கஷ்டப்பட்டு வரும் நிலையில் கணவரின் அக்கா இந்திரா காந்தி என்பவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் மனு கொடுத்தார். கணவர் எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணையில், தினசரி குடித்து விட்டு தன்னையும் குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வந்ததால், தனது தம்பி விஜயகுமாருடன் சேர்ந்து கணவரை அடித்துக் கொன்றதாகவும், தனது தம்பி விஜயகுமார் யாருக்கும் தெரியாமல் பிரேதத்தை எடுத்து புத்தூர் மலையடிவாரத்தில் புதைத்து விட்டதாகவும் கூறினார்.
உடனே குட்டி என்ற மாடசாமி காணாமல் போனது குறித்து அவரது சகோதரி இந்திரா காந்தி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், சேத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இன்று பிரேதத்தை புத்தூர் மலையடிவாரத்தில், ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், ராஜபாளையம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. புத்தூர் மலையடிவாரத்தில் புதைக்கப்பட்ட இடத்தை விஜயகுமார் காண்பித்தார்.
ஜேசிபி மூலம் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து அங்கு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. குட்டி என்ற மாடசாமியின் சகோதரி இந்திரா காந்தி என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் குட்டி என்ற மாடசாமியின் மனைவி சுப்புலட்சுமி ( 38), சுப்புலட்சுமியின் தம்பி விஜயகுமார் (31) என்ற இருவரும் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஐந்து வருடங்களாக காணாமல் போன ரவுடி பிரேதமாக தோண்டி எடுக்கப்பட்டு மனைவியும் மைத்துனரும் சேர்ந்து கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.