உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கல்லூரி மாணவிகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண் ஆளுமைகளின் வேடமணிந்து அணிவகுப்பு நடத்தி, உற்சாகமாக மகளிர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவின்போது உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய ஆளுமைகளை நமது கண்முன் பிரதிபலிக்கும் விதமாக சாதனை படைத்த பெண் ஆளுமைகளின் வேடங்கள் தரித்து மாணவிகள் அணிவகுப்பு நடத்தினர்.
நிகழ்ச்சியில் பாரத தேசத்தின் தேசியக் கொடியை கையில் ஏந்திய பாரதமாதா, நீதிமன்றத்தில் நீதி வழங்கும் நீதிதேவதை, அன்பின் வடிவமாய், பண்பின் திருவுருவமாய் போற்றப்படும் அன்னை தெரசா, பெண்கள் முன்னேற்றத்திற்கு போராடிய முத்துலட்சுமி ரெட்டி, புதுமை படைத்த இலக்கிய ஆளுமைகளான அவ்வையார், ஆண்டாள் போன்ற ஆன்மீகவாதிகள், காலத்தை வென்றவர்களும் கடமை தவறவில்லை என்பதை குறியீடாகக் கொண்ட காந்தாரி, விண்வெளித்துறையில் முத்திரை பதித்த கல்பனா சாவ்லா, விளையாட்டுத்துறையில் சாதித்துக் காட்டிய செரினா வில்லியம்ஸ், பி.வி.சிந்து, ஆண்களுக்கு நிகராக விளங்கி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரசியலில் தடம் பதித்த பிரதிபா பாட்டில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கலைத் துறையை கண்ணசைவில் கட்டிவைத்த உலக அழகி ஐஸ்வர்யாராய் ஆகியோருடன் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களின் வேடம் தரித்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் கல்லூரி வளாகத்தினுள் அணிவகுத்து ஊர்வலமாகச் சென்றனர்.
மகளிர் தின விழா நடைபெற்ற நிகழ்ச்சி மேடையில் அனைவரும் ஒருங்கிணைந்து நின்று வளரும் இளம் பருவ மங்கைகள் முன்பாக சாதனைகள் படைத்த மாதரசிகளை போற்றும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவி அபிராமி கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று சாதனை படைத்து வந்தாலும் ,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், குழந்தைத் திருமணமும் இன்றளவும் நடைபெற்று பெண்களுக்கான பாதுகாப்பு இன்னமும் கிடைக்கவில்லை எனவும், உலக மகளிர் தினத்தன்று பெண்களுக்கான பாதுகாப்பை வழங்க உறுதி செய்யவேண்டுமென அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.