விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள எம்.புளியங்குளம் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு சென்ற பெண் மீது இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலையில் வருகிறது.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரது மனைவி முத்துக்கருப்பாயி வயது(44). இவர் நேற்று பருத்தி எடுப்பதற்காக வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மேகம் இருள்சூழ்ந்த நிலையில் வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தனது தம்பிக்கு குடை எடுத்துக்கொண்டு மீண்டும் வயலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பெய்த மழையின் காரணமாக திடீரென இடி, மின்னல் தாக்கியதில் முத்துக்கருப்பாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருச்சுழி வட்டாட்சியர் சிவகுமார் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.