விருதுநகர் அருகே கொள்முதல் நிலையம் வசதி இல்லாத காரணத்தினால் அறுவடை செய்த நெல்கள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
வீணாகும் அறுவடையான நெல்கள்:-
திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை தாலுகா கள்ளக்காரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் ஏதும் அமைக்கப்படாததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு அறுவடை செய்த நெல்லை காய வைத்து விற்பனைக்கு தயார் செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து வெயிலிலும், பனியிலும் கிடப்பதால் முளைப்பு மற்றும் பூசனம் பிடித்து வீணாகும் அபாயம் உருவாகியுள்ளது.
மேலும், ஒரு சில விவசாயிகள் அருகே உள்ள ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருவதாகவும் ஏற்றுமதி செலவு, போக்குவரத்து செலவு அதிகமாவதால் முதலுக்கே மோசம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை:-
இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி சிங்கம்புலி கூறியதாவது, பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை விற்பனை செய்ய முடியாமல் தவியாய் தவித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக அமைத்து விவசாயிகளிடம் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.