விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பூவாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஏற்பட்ட தீண்டாமை கொடுமையை கண்டித்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பூவாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் 85-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவ,மாணவிகளை மற்றொரு பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஜாதிப் பெயரை சொல்லி திட்டுவதாகவும், தாக்கியதாகவும் மாணவர்கள் பெற்றோரிடம் கதறி அழுதுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து சனிிக்கிழமை பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சமரச பேச்சுவார்த்தைக்கு பின் தர்ணா போராட்டத்தை பெற்றோர்கள் வாபஸ் பெற்றுக் கலைந்து சென்றனர்.மேலும் இச்சம்பவம் குறித்து இரு தரப்பை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் உடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.