1.அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் தனிநபர்கள் வசூல் வேட்டையா?-பொதுமக்கள் உஷார்!
அருப்புக்கோட்டை நகராட்சியில் சுமார் 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டு நகரின் முக்கிய வீதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இத்திட்டம் நகராட்சியின் சார்பில் செயல்படுத்தப்படாத நிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்க உள்ளதாக கூறி தனிநபர்கள் வீடு வீடாக சென்று வரி வசூலில் ஈடுபடுவதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் நகர்மன்றத் துணைத் தலைவர் பழனிச்சாமி குடியிருப்பு வாசிகளுக்கு முன்னெச்சரிக்கை ஆக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2.பலத்த சூறாவளியால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம்-நிவாரணம் வழங்க கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் நேற்று இடி மின்னலுடன் மழை பெய்தது.ராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியை சேர்ந்த மிசா நடராசன் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இதில் தென்னையில் ஊடுபயிராக வாழை மரங்கள் பயிரிட்டிருந்தார். இந்நிலையில், காற்று பலமாக வீசியதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
ரூ.40 ஆயிரத்திற்கும் மேல் சேதம் இருக்கும் என்று விவசாயி தெரிவித்தார். எனவே மாவட்ட நிர்வாகம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
3.திறக்க படாமலேயே மூடுவிழா கண்ட புதிய சார்பதிவாளர் அலுவலகம்-குமுறும் பொதுமக்கள்
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரசோழன் கிராமத்தில் விவசாயிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல லட்சம் மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் வேளாண் விரிவாக்க மையம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்டது.ஆனால் தற்போது வரை புதிய கட்டிடங்கள் திறக்க படாமலேயே இருந்து வருகின்றன.
இதனால் குடிமகன்கள் இப்பகுதிகளை மது அருந்தும் கூடாரமாக மாற்றி வருகின்றனர். மேலும் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் விலை உயர்ந்த மின் சாதனங்கள், ஜெனரேட்டர் போன்றவை இருப்பதால் திருட்டு சம்பவம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டும் சூழல் உருவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் வேளாண் விரிவாக்க மையத்தை உடனடியாக திறந்த மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
4.அகரத்துபட்டி கிராமத்தின் உண்மையான பெயர்க்காரணம்- வரலாறு குறித்த செய்தி தொகுப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குக்கிராமமான திருமலைபுரம் முன்னொரு காலத்தில் அக்ரஹாரத்துபட்டி என அழைக்கப்பட்டது. முன்னாளில் இவ்வூரில் பிராமணர்களே அதிகம் இருந்ததாகவும் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி இங்கு உள்ள நிலங்களை பிராமணர்களுக்கு தானமாக வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.
பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் உழுது பயிர் செய்து விவசாயம் செய்வதற்காக பல்வேறு இனங்கள் இங்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் உருவாக்கி தரப்பட்டுள்ளது. காலப்போக்கில் விவசாயம் பொய்த்துப் போனதற்கு காரணமாக பிராமணர்கள் சென்னை மதுரை திருச்சி போன்ற நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.