விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரக்குடி கரைமேல் முருகையனார் திருக்கோயில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு சாட்டையடி மூலம் பேய் விரட்டும் வினோத திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கரைமேல் முருகையனார் மாசி களரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும், ஆணிகள் பொருந்திய காலனியில் வெறும் காலில் நடந்து சென்றும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக 100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் விவசாயம் செழிக்க வேண்டி பக்தர்கள் விளைவித்த நெல் பருத்தி, தானியங்களை கரகத்தின் மீது சூறை வீசினர்.
அதன்பின் கோயிலிலிருந்து மயில் வாகனத்தில் மூலவர் முருக பெருமான் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா மூலம் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.திரளான பக்தர்கள் அரோகரா அரோகரா என்ற கரகோஷத்துடன் முருகப்பெருமானை வழிபட்டனர்.
மேலும் விழாவின் சிறப்பு அம்சமாக காலங்காலமாக தொன்றுதொட்டு நடைபெற்று வரும் கோயிலின் அருகே உள்ள வீடர் திடல் பகுதியில் பேய் விரட்டும் வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பேய் விரட்டும் விழாவில் பேய் பிடித்த நபர்களுக்கு சாட்டையடி மூலம் பேய் விரட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை காண உள்ளூர் வெளியூர் என பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். பேய் விரட்டும் வினோத திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.