விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 2 மற்றும் 3-வது வார்டு வாக்கு மையத்தில் மாலை 4:45 மணிக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு, அனுமதி மறுத்ததால் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வார்டு எண் 2 மற்றும் 3 வாக்கு மையம் என் ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. மாலை 4 :45 மணி அளவில் மில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 200 பேர் வரை வாக்களிக்க காத்திருந்தனர். மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்கும் நேரம் என்பதால் கதவு மூடப்பட்டது.இதன் காரணமாக வாக்களிக்க வந்தவர்கள் வாசலில் நின்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அனுமதிக்காவிட்டால் சாலைமறியல் செய்வோம் என எச்சரிக்கை செய்தனர்.
போலீஸ் உயரதிகாரிகள் வந்து 5 மணி முதல் 6 மணி வரை கொரோனோ நோயாளிகளுக்கான நேரம் என்பதால் வாக்களிக்க அனுமதி கிடையாது என புரிய வைத்தனர்.
ஆனாலும், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள் வாக்காளர்கள். உடனடியாக ராஜபாளையம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், வடக்கு இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வாக்களிக்க ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக அரை மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
செய்தியாளர்:அ. மணிகண்டன்- விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.