விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் பயங்கர இடி மின்னலுடன் சூறாவளி காற்று வீசியதில் 100க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் நேற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. ராஜபாளையம் அருகே தேவதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள தொகுதிகளில் விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைகள் அனைத்தும் அறுவடைக்கு தயாரான நிலையில் அப்பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இப்பகுதியை சேர்ந்த மிசா நடராசன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் தென்னைக்கு ஊடுபயிராக வாழை மரங்கள் பயிரிட்டிருந்தார். காற்று பலமாக வீசியதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
பல மரங்களில் வாழைத் தார்கள் அறுவடை செய்யும் நிலையில் இருந்த நிலையில் சேதமாகி உள்ளதால் பெரும் நட்டத்தை சந்தித்துள்ளார். மேலும் வேலைக்கு கூலி கொடுக்க முடியாத நிலையில் தவித்து வருவதாக தெரிவிக்கின்றார்.
வங்கியில் கடன் பெற்று இந்த வாழை மரங்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்த நிலையில், ரூ.40 ஆயிரத்திற்கும் மேல் சேதம் இருக்கும் என்று விவசாயி தெரிவித்தார். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சேதமடைந்த வாழைகளுக்கு பயிர் காப்பீடு மூலமாகவும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.