விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தமிழ்பாடி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடியில் குளறுபடிகள் இருப்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழ் பாடி, கரிசல்குளம், ஆலடிப்பட்டி, ராமசாமிபட்டி சித்தலக்குண்டு, ஒத்தவீடு உள்ளிட்ட 7 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்பாடி பகுதியில் 200க்கும் மேற்பட்டோருக்கு பட்டியலில் பெயர் இருந்தவர்களுக்கு தள்ளுபடி இல்லை என வங்கி அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டுறவு வங்கி செயலாளர் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், உள்ளூர் கிராம மக்களை அலைக்கழித்து வருவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள், காவல்துறையினர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.