விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மயிலை தூய்மைப் பணியாளர்கள் இருவர் உயிருடன் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தார். இவர்களது சமூகப் பணிக்கு பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிவகாசி ரயில் நிலையம் அருகே உள்ள வேலாயுத ரஸ்தா சாலையில் மயில் ஒன்று காலில் அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளது.
பொதுமக்கள் யாரும் இதை கண்டுகொள்ளாமல் சென்ற நிலையில் அப்போது அவ்வழியாக தெருக்களில் குப்பைகளை சேகரிக்க வாகனத்தில் சென்ற சிவகாசி நகராட்சி தூய்மை பணியாளர்களான வடிவேல் மற்றும் முனியசாமி மற்றும் தோள் கொடு தோழா தன்னார்வலர்களான ராமச்சந்திரன், நரேன், முகமது சித்திக், கார்த்திக் ஆகியோர் உதவியுடன் காயமடைந்த மயிலை உயிருடன் மீட்டு அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உதவினர்.
அதன்பின் மயிலுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி தீயணைப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காயமடைந்த மயிலை வனத்துறையினரிடம் தீயணைப்பு படையினர் ஒப்படைத்தனர்.
உயிருக்கு போராடிய மயிலை உயிருடன் மீட்ட சிவகாசி மாநகராட்சி தூய்மை பணியாளர்களான வடிவேல் மற்றும் முனியசாமி மற்றும் தன்னார்வலர்களுக்கு தீயணைப்பு துறை, வனத் துறையினர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தூய்மைப் பணியாளர்கள் வடிவேல், முனியசாமி தன்னார்வ குழுவினர் கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:-\"சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய மயிலை பொதுமக்கள் யாரும் கண்டுகொள்ளாமல் சென்றனர்.
அப்போது அவ்வழியாக குப்பைகளை சேகரிக்க சென்ற போது மயில் ஒன்று காலில் அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் வாகனத்தை நிறுத்தி தன்னார்வலர்கள் உதவியுடன் மயிலை மீட்டு அரசு மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை அளித்து தீயணைப்பு துறையினர் மூலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மயிலை மீட்டு அதன் உயிரை காப்பாற்றியது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்களும் பொறுப்புணர்வுடன் அடிபட்டு கிடக்கும் வாயில்லா ஜீவன்களை மீட்டு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.