விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய்க்கு வரக்கூடிய நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேல்முருகன் காலனி கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாய்க்கு செல்லக்கூடிய நீர் வழித்தட கால்வாய்களை தனி நபர்கள் ஆக்கிரமித்து இறைச்சி கடைகள், உணவகங்கள், தேனீர் கடைகள் குடியிருப்புகள் என ஆக்கிரமிக்கப்படுவதாக இப்பகுதி குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் இப்பகுதியில் பெய்யும் மழைநீர் செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கண்மாய்க்கு செல்லக்கூடிய தண்ணீர் வீட்டிற்குள்ளே வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் பலமுறை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறைக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலரும் குடியிருப்பு வாசியான சாமுவேல் கூறியதாவது, “கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேல்முருகன் காலனி கண்மாய்க்கு செல்லக்கூடிய நீர்வரத்து கால்வாய்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால் கண்மாய்க்கு செல்லக்கூடிய நீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித் துறையிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.எனவே நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.