விருதுநகர் மாவட்டம் நெல்லிக்குளம் கிராம மக்கள் வீட்டிற்கு ஒரு ஜல்லிக்கட்டு காளை வீதம் சுமார் 50க்கும் மேற்பட்ட காளைகளை போட்டி போட்டு வளர்த்து வருகின்றனர். காளைகளுக்கு மண் குத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்று குவிந்து கிராமத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றன.
திருச்சுழி அருகே உள்ள குக்கிராமான நெல்லிக்குளத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்கள் தலைமுறை தலைமுறையாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீதான நாட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு காளைகளை ஒரு வீட்டிற்கு ஒன்று வீதம் 50க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளின் இனங்களான குரா பாறை, கிழக்க கித்தி, காங்கேயம், உம்பளச்சேரி, புலிச்சாரை , கல் காட்டு காளை, வடக்கத்தி காளை உள்ளிட்ட காளை ரகங்களை வளர்த்து வருகின்றனர்.
காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார்படுத்தும் விதமாக மண் குத்துதல், நடைபயிற்சி, நீச்சல் உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதேபோல் காளைகளுக்கு சத்தான உணவு வகைகளான கோதுமை தவிடு, பாசிப்பருப்பு தூசி, பச்சை அரிசி உள்ளிட்ட சத்தான உணவு வகைகள் அளிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 200 ரூபாய் வீதம் மாதத்திற்கு குறைந்தபட்சமாக ரூ.6,000 காளைகளின் உணவுக்காக செலவு செய்கின்றனர்.
வாடிவாசலில் சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளைகள் வீட்டில் வளர்க்கும் பெண்கள், குழந்தைகளுடன் பாசமாக பழகி வருகின்றன. மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்று குவித்து வருகின்றன இந்த ஊர் காளைகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது, நெல்லிக்குளம் கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக எங்கள் முன்னோர்கள் பேணிப் பாதுகாத்து வந்த ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பில், தற்போது வளரும் இளம் தலைமுறையினரான நாங்களும் ஈடுபட்டு வருகிறோம்.
வளர்க்கப்படும் காளையானது எங்களது வீட்டில் ஒருவர் போல கருதி பாதுகாத்து வருகிறோம். அனைவரிடமும் அன்பாக பழகி விடுகிறது. ஒவ்வொரு காளைக்கும் செல்ல பெயர் வைத்து தான் அழைப்போம். தென்மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளன எங்கள் காளைகள்.
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும்போது எங்களது கிராமத்தின் பெயரை சொல்லி அழைக்கும் போது எங்களுக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதேபோல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஜல்லிக்கட்டு காளை மீது மிகுந்த ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர் என்றார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.