மானா
மதுரை -
விருதுநகர் இடையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் பாதையில் சோதனை முறையில் ரயில் இயக்கப்பட்டது. இதற்கு பயணிகள், வியாபாரிகள் பலரும் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை 67 கிலோ மீட்டர் ரயில் பாதை மின் மயமாக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக மின் பாதை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். மேலும் மின் மயமாக்கும் பணிகள் மந்த கதியில் நடந்து வந்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது அடுத்த மாதத்திற்குள் மின்மமாக்கும் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மின்சார ரயில் பாதை பணி மந்த கதியில் செயல்பட்டு வருவதாக நியூஸ் 18 உள்ளூர் செய்தி இணையதளத்தில் செய்தி வெளியானது. செய்தி வெளியான நிலையில் ரயில்வே நிர்வாகம், தற்போது விருதுநகர் மானாமதுரை இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்ததையொட்டி புதிய மின் வழங்கல் மையத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் திறந்து வைத்தார். தனி ரயிலில் வந்த பாதுகாப்பு ஆணையருடன், எலக்ட்ரிக் இன்ஜினியர் ராஜேஸ்மேத்தா, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் மற்றும் ரயில்வே போலீசார் ஏராளமானோர் இருந்தனர்.
அதனை தொடர்ந்து மானாமதுரை - நரிக்குடி - திருச்சுழி - அருப்புக்கோட்டை - விருதுநகர் இடையே மின்மயமாக்கப்பட்ட புதிய ரயில் பாதையில் 25 KV AC திறன் மிக்க ஆற்றல் ஊட்டப்பட்டு அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனையின்போது ரயில் அதிக வேகத்தில் அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தை கடந்து சென்றது.
இந்த சோதனை ஓட்டத்தினை ஏராளமான பொதுமக்கள் தூரத்தில் இருந்தவாறு கண்டு ரசித்தனர். ரயில் சோதனை ஓட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் ரயில் நிலையத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.