விருதுநகர் மாவட்டம் உழக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியை பணியிடமாறுதல் செய்தியறிந்த பள்ளி மாணவ - மாணவிகள் கண்ணீர் மல்க ஆசிரியரை வழியனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள உழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அருப்புக்கோட்டை ஆத்திபட்டியை சேர்ந்த பூமாரி. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியில் சேர்ந்த நாள் முதல் தற்போது வரை பள்ளியில் மாணவ, மாணவர்களிடையே அன்பாக பழகும் தன்மை உடையவராக இருந்தார். பாடங்கள் கற்றுக்கொடுப்பதில் அன்பான கண்டிப்பும், மாணவர்களை அரவணைத்து செல்லும் குணமும் கொண்டிருந்த ஆசிரியை பூமாரி கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பான முறையில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு முதுகலை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று இடமாறுதல்அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியில் சேர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியை பூமாரி நேற்று வழக்கம் போல பள்ளிக்கு வருகை தந்தார். கடந்த 15 ஆண்டுகளாக இதே பள்ளியில் பணிபுரிந்து வரும், தங்களின் அபிமான ஆசிரியை பூமாரி திடீரென பதவி உயர்வில் இடமாறுதலாகி பள்ளியை விட்டு மாறுதலாகிச் செல்லும் செய்தியறிந்த பள்ளி மாணவர்கள் ஆசிரியை பூமாரியை கண்டதும் அவரை பிரிய மனமின்றி அனைவரும் திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதனைக்கண்ட பூமாரியின் கண்களும் குளமாக காட்சியளித்த நிலையில் பள்ளி மாணவர்களின் அன்பை உணர்ந்த பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர், ஆசிரியைகளும், கண்கலங்கினர். மேலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலான மாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு பின்பு சமாதானமான பள்ளி மாணவர்கள் பிரியாவிடையின் போது கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆசிரியை பூமாரி கூறியதாவது, பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து மாணவர்களின் அன்பைப் பெற்றதால் எனது இடமாறுதல் செய்தியறிந்து மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தாலும் எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே இடமாற்றம் பெற்றுள்ளேன். அதே நேரத்தில் மாணவர்கள் என் மீது வைத்துள்ள அன்பை பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது என கண்ணீர் மல்க உருக்கமாக தெரிவித்தார்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.