விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் மேட்டமலை ஊராட்சி செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு ஒத்துழைக்காததால் மேட்டமலை ஊராட்சி மன்ற தலைவரின் கையொப்பமிடும் அதிகாரத்தை பறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேட்டமலை கிராம ஊராட்சி செயலர் கதிரேசன். வசந்தி என்பவர் மேட்டமலை கிராம ஊராட்சியில் புதிய கட்டிடம் கட்டிடுவதற்கு கட்டிட வரைபட அனுமதி கோரிய விண்ணப்பத்திற்கு ரூ.20,000 லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினரால் கதிரேசன், கைது செய்யப்பட்டு திருவில்லிபுத்தூர் கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இக்குற்றச் சம்பவம் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு விசாரணைக்குரிய ஆவணங்களை ஊராட்சிமன்ற தலைவர் பார்த்தசாரதி வழங்க மறுத்ததால், செயற் பொறியாளர் (ஊரகவளர்ச்சி), உதவிஇயக்குநர் (ஊராட்சிகள்), சாத்தூர் ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), சாத்தூர் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் ஆகிய ஐவர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
விசாரணைக் குழுவினர், இது தொடர்பான விசாரணை க்காக மேட்டமலை ஊராட்சிமன்றத்திற்கு சென்ற போது ஊராட்சிமன்ற தலைவர் பார்த்தசாரதி, ஊராட்சிமன்ற அலுவலகத்தை விசாரணையை தடுக்கும் நோக்கத்தில் பூட்டி சென்றதால் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து திறக்கப்பட்ட போது ஊராட்சி தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் ஊராட்சியின் மாதாந்திர வரவு செலவு கணக்கினை ஆய்வு செய்யமுடியாத சூழல் உருவானது.
இந்நிலையில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மேட்டமலை கிராம ஊராட்சியின் காசோலைகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் முதன்மை கையொப்பமிடும் ஊராட்சித் தலைவரின் அதிகாரமானது சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டாரவளர்ச்சி அலுவலருக்கு வழங்கி மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.