விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மன்ற முதல் கூட்டம் தலைவர் பவித்ரா ஷ்யாம் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலர் சோலைமலை சொத்து வரி உயர்வை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து கூட்டம் நடைபெற்று, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்மன்ற முதல் கூட்டம் தலைவர் பவித்ரம் ராஜா தலைமையில் நடைபெற்றது. திருக்குறளுடன் துவக்கப்பட்ட நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் துணைத் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோரது படங்கள் நகர்மன்ற கூட்ட அரங்கில் திறக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதர தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 18 வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சோலைமலை எழுந்து, சொத்து வரி உயர்வு ஏழை எளிய மக்களை கடுமையாக பாதித்துள்ளதை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி கூட்டத்தை விட்டு வெளி நடப்பு செய்தார்.அதன் பின்னர் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை
அதேபோல் அருப்புக்கோட்டை நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொத்துவரி சீரமைப்பு மற்றும் கருத்துக்கேட்பு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமை வகித்தார்.முன்னாள் நகர்மன்றத் தலைவரும்,தற்போதைய 8வது வார்டு உறுப்பினருமான சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் பாஸ்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது 16வது வார்டு உறுப்பினர் ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ) பாலசுப்பிரமணி பேசுகையில்,நகராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளப் பணம்,பிஎப் உள்ளிட்டவை குறித்து விரைவில் தீர்வு காணப்படவேண்டுமென கோரிக்கை வைத்தார்.
10வது வார்டு உறுப்பினர் அப்துல் ரகுமான் பேசுகையில், 'புதிய பேருந்து நிலையத்தில் புதிய இசேவை மற்றும் வரிவசூல் மையம் திறக்கப்படவேண்டுமென' கோரிக்கை வைத்தார். அதற்கு விரைவில் கணினி மையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணையாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.
31வது வார்டு உறுப்பினர் கவிதா பேசுகையில் 'அருப்புக்கோட்டை நகராட்சி இடுகாட்டில் அனுமதியின்றி பலரும் நினைவுக் கட்டடம் ' எழுப்பியுள்ளனர்.அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை வைத்தார்.அதற்கு,நேரில் உரிய ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணையாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.
இதையடுத்து சொத்துவரி சீரமைப்பு மற்றும் அதற்கான கருத்துக்கேட்பு விவரங்களை மே மாதம் 20ம் தேதிக்குள் நகர் மன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்தல் வேண்டுமென நகர்மன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகாசி
இதுபோல் சொத்து வரி உயர்வை கண்டித்து சிவகாசி மாநகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி வெளிநடப்பு செய்தனர். விருதுநகர் நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக அமமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்து தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தாலும் திமுக உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.