பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தனியார்மயம் நடவடிக்கையை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக விருதுநகரில் 95% பேருந்துகள் இயங்கவில்லை, மேலும், மத்திய அரசை கண்டித்து, நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இப்போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரசு போக்குவரத்துத் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்து நிலையங்களில் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அருப்புக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் எதிரே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.மதுரை செல்லும் பிராதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். போராட்டம் காரணமாக புதிய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து காலை வேளையில் மொத்தம் உள்ள 57 பேருந்துகளில் கிராமங்களுக்கு செல்லும் 5 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 52 பேருந்துகள் இயங்காமல் போக்குவரத்து கழக பணிமனையில் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டன. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் தனியார் பேருந்துகள் மட்டும் வழக்கம்போல் இயங்குகின்றன.
அரசுப்பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள், பணிக்கு செல்வோர், மாணவர்கள் சிரமமடைந்தனர். அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவில்லிப்புத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து ஊழியர் சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் 48 பேருந்துகளில் 7 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.சிவகாசி போக்குவரத்து பணிமனையில் உள்ள புறநகர் நகர் பேருந்துகள் 70 பேருந்துகளில் வெறும் மூன்று பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்துள்ளது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.