விருதுநகர் அருகே நேரத்திற்கு பேருந்து எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதால் பேருந்துகளை நடுவழியில் நிறுத்தி தனியார் பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரத்திற்கு எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனை:-
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை விருதுநகருக்கு 2 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நேரத்திற்கு எடுப்பதில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை 8.50-க்கு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து விருதுநகருக்கு கிளம்பிய தனியார் பேருந்து மெதுவாக கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது.பின்னால் 8.52 மணிக்கு கிளம்பிய அரசு நகரப்பேருந்து சிவன் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னால் மெதுவாக சென்ற தனியார் பேருந்தை முந்த முயன்ற போது தனியார் பேருந்து ஓட்டுநருக்கும் அரசு பேருந்து ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்:-
அப்போது தனியார் பேருந்து ஓட்டுனருக்கும் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜா என்பவரும் தகராறு ஏற்பட்டது. சாலையில் பேருந்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்ட போது, தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜாவை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயணிகள் கடும் அவதி:-
இதன் காரணமாக, அருப்புக்கோட்டை நகர் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல்நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை சமாதானம் செய்தனர். போலீசாரின் சமாதானத்தை ஏற்று அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை எடுத்துச் சென்றனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்:அ.மணிகண்டன்,
விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.