கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுக்குப் பிறகு மாசிமக விழாவையொட்டி
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் காவடி எடுத்து பக்தி பரவசத்துடன் திருச்செந்தூர் நோக்கி பாத யாத்திரை புறப்பட்டனர்.
திருச்செந்தூர் புறப்பட்ட முருக பக்தர்கள்:-
அருப்புக்கோட்டை செல்வ விநாயகர் முருக பக்தர்கள் 39-வது ஆண்டாக மாசிமக விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து பக்தி பரவசத்துடன் பாதயாத்திரை பயணத்தை தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, மாலை அணிந்த முருக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக காவடி எடுத்தும், சேவல் கொடி ஏந்தியும் பக்தி பரவசத்துடன் திருச்செந்தூர் நோக்கி பாதயாத்திரை பயணத்தை தொடங்கினர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் ஆர்வமாக திருச்செந்தூர் நோக்கி பாத யாத்திரை பயணத்தை மேற்கொண்டு உள்ளனர்.
தனி வழிப்பாதை அமைக்க கோரிக்கை:-
இதுகுறித்து நம்மிடம் பேசிய, முருக பக்தர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் கனகவேல் கூறியதாவது, மாசிமக விழாவிற்கு திருச்செந்தூர் பாதயாத்திரையாக சுமார் 40 ஆயிரம் பேர் பயணம் செய்வது வழக்கம். கொரோனா கட்டுப்பாடு காரணமாக 10,000 பேர் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி பாதயாத்திரை பயணத்தை மேற்கொண்டுள்ளோம். பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்கு தனி பாதை உருவாக்கப்பட்டது போல், அருப்புக்கோட்டையில் இருந்து திருச்செந்தூர் செல்ல தனி பாதயாத்திரை பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.