விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்படாத நிலையில் தனிநபர்கள் வரிவசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து குடியிருப்புவாசிகள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி நகராட்சி துணைத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் சுமார் 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டு நகரின் முக்கிய வீதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் அருப்புக்கோட்டை எம்எஸ் கார்னர் முதல் பந்தல்குடி வரையிலான முதல் பாதாள சாக்கடை திட்டத்திற்கு திட்டமிட்டனர். ஆனால் இதுவரை இத்திட்டம் நகராட்சியில் சார்பில் செயல்படுத்தப்படாத நிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்க உள்ளதாக கூறி தனிநபர்கள் வீடு வீடாக சென்று வரி வசூலில் ஈடுபடுவதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக வரிவசூலில் ஈடுபடும் நபர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கண்காணித்து காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகர்மன்ற கூட்டத்தில் பேசிய நகராட்சி துணைத் தலைவர் பழனிசாமி கூறியதாவது, அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் இதுவரை பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை, அறிவிப்பாகவே உள்ளது. ஆனால் சில தனிநபர்கள் பாதாள சாக்கடை திட்டம் தொடங்குவதாக கூறி குடியிருப்புவாசிகள் இடம் வரி வசூலிப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்களை அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.