விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஊராட்சி மன்ற தலைவர், 100 நாள் வேலை உறுதி திட்ட பணி பொறுப்பாளரை மாற்றியதால் அவரை மீண்டும் நியமிக்க கோரி பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். காவல்துறை, வளர்ச்சித் துறை அதிகாரிகளின் சமரசத்தையும் ஊராட்சி மன்ற தலைவர் ஏற்க மறுத்ததால் பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் பணியை புறக்கணித்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் புதூர் ஊராட்சி மன்ற தலைவராக ராமலட்சுமி என்பவர் இருந்து வருகிறார். புத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் 300 பேர் வரை இருக்கின்றனர். இவர்களுக்கு பணித்தள பொறுப்பாளராக ஆறுமுக தாய் என்பவர் இருந்து வருகிறார். இவரை ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி பணி நீக்கம் செய்து விட்டதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக நாகம்மாள் என்பவரை பணிக்கு நியமித்தார்.அதை ஏற்க மறுத்த பணியாளர்கள் மீண்டும் ஆறுமுக தாய் தான் பணியாளராக வரவேண்டும் என கூறி வேலைக்கு செல்லாமல் ஊராட்சி மன்ற தலைவர் ராம லட்சுமியை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்துமுற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
தகவல் அறிந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பணி மேற்பார்வையாளர் ஞானகுரு தளவாய்புரம் காவல்துறை அதிகாரி உள்பட புத்தூர் கிராம நிர்வாகிகள் பலர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆட்சி மன்ற தலைவர் எதையும் கேட்காமல் நீக்கியது நீக்கியது தான் என பணியில் மீண்டும் சேர்க்க மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் புதூர் ஊராட்சி மன்றத்திலே தங்கியிருந்து பணிக்கு செல்வதை புறக்கணித்தனர். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பி உள்ளதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக புத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.