Home /local-news /

வீரசூரன் கோயில் புரவி எடுப்பு விழா – உற்சாகத்துடன் கொண்டாடிய நெல்லிக்குளம் ஊர் மக்கள்..!!

வீரசூரன் கோயில் புரவி எடுப்பு விழா – உற்சாகத்துடன் கொண்டாடிய நெல்லிக்குளம் ஊர் மக்கள்..!!

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம்

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நெல்லிக்குளத்தில் தலைமுறை தலைமுறையாக பாரம்பரியம் மாறாமல் மாட்டு வண்டிகளில் களிமண்ணால் செய்யப்பட்ட குதிரைகள் கிராம தெய்வங்களுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தும் புரவி எடுப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நெல்லிக்குளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அருள்மிகு வீரசோழன் அரியநாச்சி அம்மன் கருப்பசாமி திருக்கோயில் சித்திரை பொங்கல் புரவி எடுப்பு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்சுழி அருகே உள்ள நெல்லிக்குளம் கிராமத்தில் சித்திரை பொங்கல் புரவி எடுப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வாக தமிழர்களின் பாரம்பரியமாக மாட்டு வண்டிகள் பூட்டிய காளைகள் மூலம் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை வீரசோழன் அரியநாச்சி அம்மன், கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு கிராம மக்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக புரவி எடுப்பு விழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோயிலில் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் ஆனைகுளம் கிராமத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், கன்னிமார் தெய்வங்கள் உள்ளிட்டவற்றை பாரம்பரியம் மாறாமல் மாட்டுவண்டியில் ஏற்றி கிராமத்தில் உள்ள தெய்வங்களுக்கு கிராமமக்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து கிராம தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தும் மொட்டை அடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இவ்விழாவில் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மங்களேஸ்வரன் கூறியதாவது, எங்களது கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக பாரம்பரியம் மாறாமல் மாட்டு வண்டிகளில் களிமண்ணால் செய்யப்பட்ட குதிரைகள் கிராம தெய்வங்களுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தும் புரவி எடுப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் மூலம் கிராமத்தில் விவசாயம் செழிக்கவும் மழை வேண்டியும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள கிராம மக்கள் அனைவரும் ஒன்று படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி